தமிழ்நாடு தோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தோல்வியோடு முடிந்த மக்கள் நல கூட்டணி பயணம்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

"இனி அவ்வளவுதான்.. இந்த மக்கள் மாற்றத்தை விரும்பாமல் மீண்டும் மீண்டும் அந்த இரு கட்சிகள் காலடியில்தான் போய் விழுவார்கள்.. மக்களுக்கு நல்லது செய்யனும்னு பண பலத்தை எதிர்த்து நின்னாங்க பாருங்க, அவங்கள சொல்லனும்.." இப்படியெல்லாம் புலம்பும் மக்கள் நல கூட்டணி ஆதரவாளர்களா நீங்கள், அப்படியானால் உங்களுக்காகத்தான் இந்த பதிவு:

முதலில் மக்களை குறை சொல்லும் விரக்தி மனப்பான்மையை விட்டுவிட்டு, மக்களின் கருத்தை அறிய முற்படுவதுதான் மக்கள் நல கூட்டணி தலைவர்களின் முதல் வேலையாக இருக்க வேண்டும்.

50 வருட தொடர் ஆளுகைக்கு பிறகும், அதிமுக, திமுகவுக்கு மாற்றை மக்கள் விரும்பவில்லை என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு.

மாற்றம்

2016 அல்ல 2006ம் ஆண்டிலேயே மாற்றம் தேவை என்பதை மக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த தேர்தலில் முதன்முதலில் களமிறங்கிய விஜயகாந்த்தின், தேமுதிக பெற்ற 10 சதவீத வாக்குகளே அதற்கு சாட்சி.

முன்னேற்றம்

ஏதோ ஆர்வக்கோளாறில் விஜயகாந்த்துக்கு மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றுதான் பிற கட்சிகள் அதுவரை நினைத்திருந்தனர். ஆனால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10.3 சதவீதம்.

மாற்று சக்தி தேவை

விஜயகாந்த் மாற்று அணியின் தலைவராக இருக்க வேண்டும், மாற்று சக்தி வர வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைதான் அந்த வாக்குகள்.

சரிந்த வாக்கு வங்கி

ஏனெனில் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்றபோதுகூட, பின்னர் நடந்த 2014 சட்டசபை தேர்தலில் 5.1 சதவீத வாக்குகளைத்தான் தேமுதிக பெற்றது.

நம்பிக்கை இழப்பு

அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் மாற்றுக்காக வாக்களித்த மக்கள் தேமுதிகவைவிட்டு பார்வையை விலக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கான அறிகுறிதான் மேற்கண்ட புள்ளி விவரங்கள்.

அவசர கூட்டணி

2016 சட்டசபை தேர்தலில் மாற்று என்ற கோஷத்தை மக்கள் நல கூட்டணி முன்வைத்தது. இதற்கு விஜயகாந்த்தையும் அழைத்துக்கொண்டது. ஆனால், இந்த கூட்டணி உருவானதே அவசர கதியில்தான். சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின்போதுதான் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.

கடைசி நேர களேபரம்

இந்த நான்கு கட்சிகளுமே கூட்டணியை அமைத்தன. பின்னர் கடைசி கட்டத்தில்தான், விஜயகாந்த், வாசன் கட்சிகள் அதில் இணைந்தன. அதிலும் வாசன் கட்சி, அதிமுகவின் கதவுகளை கடைசிவரை தட்டிவிட்டு ம.ந.கூவில் இணைந்து மாற்றம் பற்றி பேசியது.

சந்தர்ப்பவாதமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் மறுத்ததாலேயே ம.நகூட்டணியில் இணைந்ததாக ஒரு தகவலும் கசிந்தது. மதிமுகவை எந்த கட்சியும் சேர்க்க மறுத்ததால் கூட்டணி அமைத்ததாகவும் தகவல் பரவியது. இவையெல்லாமாக சேர்த்து இதை ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாக பார்க்க செய்தன.

பண விவகாரம்

அமைந்த கூட்டணியாவது உருப்படியாக ஒருமித்த குரலில் ஒலித்ததா என்றால் அதுவும் இல்லை. விஜயகாந்த்துக்கு பணம் தர திமுக முன்வந்தது என்று வைகோ சொன்னால், அப்படியெல்லாம் இல்லை என்கிறார் பிரேமலதா. ஆனால், தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பாக, பணம் தர வந்தது உண்மைதான் என்கிறார் விஜயகாந்த்.

அப்படியே ஷாக் ஆகுறாங்க

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொன்ன வைகோ, கடைசி நிமிடத்தில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்கிறார். கூட்டணி தலைவர்களிடம் கருத்து கேட்க பத்திரிகையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், "அப்படியா.. நீங்கள் சொல்லிதான் எனக்கே தகவல் தெரிகிறது.. ரொம்ப ஷாக்காக இருக்கிறதே" என்று எதிர்முனையில் பதில் வருகிறது.

முரண்பட்ட தலைவர்கள்

ராகம் ஒருபக்கம், தாளம் மறுபக்கம் சென்றால் கச்சேரி எப்படி களைகட்டும். அதுதான் மக்கள் நல கூட்டணி விஷயத்திலும் நடந்தது. தலைவர்களின் தடுமாற்றம், முன்னுக்கு பின் முரண்பட்ட செயல்கள் மக்களை கோபப்படுத்தின.

எத்தனை மாற்றம்

இதுமட்டுமின்றி, மாற்றத்தை நாங்கள்தான் தருவோம் என்று கூறிக்கொண்டு, மாற்றம் என்ற வார்த்தைக்கு காப்புரிமை கேட்டு சண்டைபோடும் அளவுக்கு கட்சிகள் கோதாவில் குதித்தன. பாஜக, பாமக, நாம்தமிழர் கட்சிகளும், எங்களால் மட்டுமே மாற்றம் தர முடியும் என்றனர்.

மக்கள் தடுமாற்றம்

எந்த கட்சி மாற்றத்தை தரும் என்று தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்துவிட்டன இத்தனை கட்சிகளும். இதற்காக, குடும்பத்தில் ஒவ்வொருவரும், மாற்றம் தருவதாக சொன்ன ஒவ்வொரு கட்சிக்காக வாக்களிக்க முடியுமா?. எனவேதான், வாக்குகளை சிதற விடவேண்டாம் என்று இஷ்டத்திற்கு இரு கட்சிகளுக்கும் வாக்குகளை குத்தி தள்ளியுள்ளனர் வாக்காளர்கள்.

ஓட்டு சிதறல்

மாற்றம் தருவோம் என்ற தேமுதிக, பாமகவிடமிருந்து வாக்குகளை பெற்றுள்ளது. அதே மாற்றத்தை சொன்ன பாமக, தேமுதிகவுக்கு போக வேண்டிய வாக்குகளை பறித்துள்ளது. இருவரும் மாறிமாறி வாக்குகளை சிதறவிட்டதில் திமுக, அதிமுக பலன் பெற்றுள்ளது.

இனிதான் பயணம் ஆரம்பம்

இனிதான், மக்கள் நல கூட்டணியினர் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணியாக இல்லாமல் பெயருக்கேற்ப, மக்களுக்கான கூட்டணியாகவே அது தொடர வேண்டியதுதான் மாற்றத்தை விரும்புவோருக்கு அக்கூட்டணி தலைவர்கள் தரும் பரிசாக இருக்க முடியும்.

அடிமட்டத்தில் ஊடுருவல்

அடுத்த 5 வருடங்களும் இதே கூட்டணி அப்படியே தொடர்ந்தாலே அது மாபெரும் சாதனை. அதுவே மக்களுக்கு கூட்டணி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வேரூன்றி, அவர்களை நெருங்க வேண்டும். அதிமுக, திமுகவை போல அடி மட்டத்திலும் நிர்வாகிகளை பலப்படுத்தி மக்களை தங்கள் கைக்குள் வைக்க வேண்டும்.

ஓட்டு போடமாட்டார்கள்

அடிமட்டத்தில் வேரூன்றாத கட்சிகள் வேறும் காட்சி பொருளாகத்தான் பார்க்கப்படும். அவர்கள் பேச்சு ரசிக்கப்படும், கருத்துக்கள் மதிக்கப்படும். ஆனால், வாக்கு போடும் தினத்தில், இரு திராவிட கட்சிகளின் அடிமட்ட நிர்வாகி கொடுக்கும் ஆசை வார்த்தைகளுக்கும், அன்பு கட்டளைகளுக்கும் மதிப்பு கொடுத்து அக்கட்சிகளுக்குத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்