முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்த தேமுதிக!

தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர்.
கட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் படைத்து விட்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த்தே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சோகமும் தேமுதிகவினரை வருத்தமடைய வைத்துள்ளது.
விஜயகாந்த் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக அத்தனை பேரும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
கருப்பு எம்.ஜி.ஆர்.
கருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரே விஜயகாந்த்தை கூப்பிட ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு சுத்தமாக வரவேற்பு இல்லை, எம்.ஜி.ஆர். ஒருவர்தான் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிய வைத்து விட்டனர்.
கிராம மக்களை ஏமாற்ற முடியாது
தொடர்ந்து கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகப் பார்த்துப் பார்த்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதற்கு அவரும், அவரது மனைவியும் வித்தியாசமான காரணத்தை வேறு கூறினார்கள். ஆனால் உண்மையில், படிக்காதவர்கள், நடிகர் என்ற இமேஜைப் பார்த்து ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று தேமுதிக தரப்பு கருதியது. ஆனால் உளுந்தூர்ப்பேட்டை மக்கள் சுதாரிப்பாக இருந்து விட்டார்கள்.
104 தொகுதிகளிலும் டெபாசிட் காலி
இந்த முறை 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி கேவலமாக தோற்றுள்ளது. 3வது இடம், 4வது இடம், 5வது இடம் என்றுதான் கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் டெபாசிட் போய் விட்டது.
11 வருடங்களில் இல்லாத சரிவு
கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் அசத்தலான வாக்குகளைக் குவித்தது. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அது பெற்றிருப்பது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
தூக்கி வீசிய தமிழகம்
எதற்கெடுத்தாலும் கோப்படுவது, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்று திட்டுவது, தூ என்று துப்புவது, சொந்தக் கட்சிக்காரர்களையே மரியாதை இல்லாமல் அடிப்பது, நடத்துவது என்று இருந்து வந்த விஜயகாந்த்தை மக்கள் தற்போது தூக்கி அடித்து விட்டார்கள்.
மறுபடியும் முதல்ல இருந்தா!
மொத்தத்தில் முதல் முறையாக தேமுதிக வேட்பாளர்கள் கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்து மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டார்கள்.