2021 நமக்கான ஆண்டு தம்பிகள் யாரும் சோர்ந்து விட வேண்டாம்: சீமான்

2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. திமுக வலிமையான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. காங்கிரஸ் சில எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் அனுப்பியுள்ளது.
திமுக, அதிமுக தவிர மாற்று கோஷத்தை முன்வைத்த அத்தனை கட்சிகளும் வாஷ் அவுட் ஆகியுள்ளனர். 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 5000 வாக்குகளுக்கு உள்ளேதான் பெற்றுள்ளனர்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 12ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி எதிர்கட்சிகள், பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் அறிக்கை, பேட்டி அளித்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிவுகளைப் பார்த்த சீமான், தனது கட்சித் தொண்டர்களுக்கு ஆறுதல் வார்த்கைள் தெரிவித்தாராம்.
நேற்று தனது வீட்டில் தொண்டர்களிடம் பேசிய சீமான், ஜாதியை கூறி கட்சி நடத்துகிற ராமதாஸ், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான வைகோ, நம்மைவிடவும் குறைந்த ஓட்டுக்களைத்தான் வாங்கியிருக்கிறார். எண்பது ஆண்டு பாரம்பரியம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட நாம் வாங்கிய ஓட்டை வாங்கவில்லை.
8.3 சதவீத ஓட்டை வைத்திருந்த விஜயகாந்துக்கு 2.3 சதவீதம்தான் வாக்கு கிடைச்சிருக்கு. அவருக்கு ஆந்திரா கிளப் உள்பட பல தொழிலதிபர்கள் பணம் கொடுத்தார்கள். எந்தப் பணபலமும் இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொண்டோம். இப்பதான் களத்துக்குள்ள வந்திருக்கோம். இந்தத் தேர்தலை முயற்சி மற்றும் பயிற்சி என்ற அடிப்படையில்தான் எதிர்கொண்டோம் என்று கூறினாராம்
மானத் தமிழன், வாங்கின காசுக்கு விசுவாசமா ஓட்டுப் போட்டிருக்கான். நாம என்ன பண்ண முடியும்? தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தைக் கொட்டி வேலை பார்த்தார்கள். நாம் உண்டியல் குலுக்கி தமிழனிடம் கையேந்தி நின்னோம். நமக்கு ஒரு சதவீதம் கொடுத்திருக்கான்.
நமக்கு இன்னமும் வயசு இருக்கு. அடுத்த தேர்தலை வலிமையோடு சந்திப்போம். 2021-ம் ஆண்டு நமக்கான ஆண்டாக இருக்கும். தம்பிகள் யாரும் சோர்வடைந்துவிட வேண்டாம். தேர்தலை எதிர்கொண்ட ஓராண்டிலேயே நம்மை ஒரு சதவீதம் பேர் ஆதரித்திருக்கிறார்கள்.
பணபலம் எதுவுமில்லாமல் நமக்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வாக்கு சதவீதத்தை இன்னும் உயர்த்தப் பாடுபடுவோம்' என எங்களை உற்சாகப்படுத்தினார் என்றும் சீமான் ஆறுதல் தெரிவித்தாராம்.