வட தமிழக மாவட்டங்களில் வாகை சூடிய திமுக!

சட்டசபை தேர்தலில் வட தமிழகத்தில் வன்னியர் மாவட்டங்களில் அதிக இடங்களை திமுக அள்ளியிருக்கிறது. வட மாவட்டங்களின் 66 தொகுதிகளில் 40 இடங்களை திமுக அள்ளியிருக்கிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அதிக எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைத்திருக்கிறது.
அதே நேரத்தில் திமுக அணியும் வலுவான எதிர்க்கட்சியாக 98 இடங்களில் வென்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றிக்கு பிரதானமே சென்னை உட்பட வட தமிழக தொகுதிகளில் கிடைத்த மாபெரும் ஆதரவே...
தோல்வியை சந்தித்த பாமக
வட தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னியர்களே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றனர். வட தமிழக வாக்குகள் கடந்த பல தேர்தல்களில் பாமகவுக்குதான் கிடைத்து வந்தன... இம்முறை கூட்டணி இல்லாமல் பாமக தனித்துப் போட்டியிட்டது. இருப்பினும் அந்த கட்சியால் 1 இடத்தில் கூட வெல்ல முடியாத அளவுக்குதான் வாக்குகளைப் பெற முடிந்தது.
சென்னை கோட்டையானது
இந்த மாவட்டங்களில் மொத்தம் உள்ள 69 தொகுதிகளில் 40- இடங்களை திமுக கைப்பற்றி இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் திமுக 10 இடங்களைக் கைப்பற்றி சென்னை திமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபமானது. அதிமுக 6 இடங்களில்தான் வென்றது.
காஞ்சியில் அபாரம்
திருவள்ளூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளில் அதிமுக 7 ஐ கைப்பற்றியது. திமுக 3 இடங்களைத்தான் வெல்ல முடிந்தது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் திமுக 9 இடங்களை அள்ளியது. இங்கு அதிமுகவுக்கு கிடைத்தது 2 இடங்கள்தான்...
திருவண்ணாமலை
வேலூர் மாவட்டத்தின் 13 தொகுதிகளில் அதிமுகவுக்கு 7; திமுக 6 இடங்கள் கிடைத்தன. திருவண்ணாமலை மாவட்டத்திலோ 8 தொகுதிகளில் திமுக 5; அதிமுக 3 இடங்களில் வென்றது.
அடடே! விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் திமுக 7 இடங்களை அள்ளியது. அதிமுகவுக்கு 4 தான் கிடைத்தது. இப்படி வன்னியர் மாவட்டத்தின் பெரும்பான்மை தொகுதிகளை திமுக அள்ளியதால்தான் இன்று திமுக வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர முடிந்துள்ளது.