தமிழின் சிறப்புகள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்

தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் சிறப்புகள்  
படம்

இந்த கட்டுரை தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் பற்றி ஆராய்கிறது

 
தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும்

பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்

0. ஏறத்தாழ நானூறு ஆண்டுகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆவணமாக விளங்கும் சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வு இலக்கியத்தளத்தில் மட்டுமே ஆராயப்பட்ட நிலை மாறி அவற்றைக் கல்வெட்டு தொல்லியல் சான்றுகள், நாணயவியல் ஆதாரங்கள், மொழியியல் சான்றுகள், இந்திய வரலாற்றியல் சான்றுகள் எனும் பல ஆதாரங்களின் அடிப்படையில் பரவலான தளத்தில் ஆராயும் சூழல்கள் இன்று உருவாகியுள்ளன. இந்த ஆய்வுப் போக்குகள் பண்டைய தமிழ்ச் சதாயத்தின் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்களை வெளிக்கொணரவும் சங்க இலக்கியத்தின் பழமை வாய்ந்த காலத்தை நிர்ணயிக்கவும் பேரளவில் உதவுகின்றன. இந்த ஆய்வுத் தடத்தில் புதியதொரு பரிமாணத்தை உருவாக்குவதாக வெளிவந்துள்ள ஐராவதம் மகாதேவனின் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய விரிவான நூல் சங்க இலக்கியச் சமுதாயத்தின் மறுபக்கத்தை (சங்க இலக்கியம் வெளிப்படுத்தாத சமுதாயத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்து மதம், எழுத்து, அரசு, சமுதாயம் எனும் பல்வேறு நிலைகளிலும் பல புதிய பார்வைகளை முன்வைத்துள்ளது. இந்த நூலின் இந்தப் பார்வையோடு சங்க இலக்கியத்தை இணைத்து நோக்குவதை இந்த ஆய்வு அடிப்படையாகக் கொண்டுள்ளது.

1. சங்கஇலக்கியம் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் -: இருவேறு பரிமாணங்கள்

சங்கஇலக்கியமும் தமிழ்பிராமிக் கல்வெட்டுகளும் காட்டுகின்ற சமுதாயம் குறிப்பிட்ட ஒரே சமுதாயமாக இருந்தாலும் இரண்டு தரவுகளும் இருவேறுபட்ட பரிமாணங்களை முன்வைப்பனவாக அமைந்து சங்ககாலச் சமுதாயத்தைக் காட்டுகின்றன. இந்த அடிப்படையை மனத்தில் கொண்டே இரண்டையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

''சங்ககால மக்கள் சமயவாழ்விலே சமண பெளத்தரின் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்ததென்பது தெளிவாகிறது'' (1971:171) என சு. வித்தியானந்தனும் ''இகல் கண்டோர்-வேதநூலை மேற்கொள்ளாது மாறுபட்டவர். அவர்களைப் புத்தர் முதலாயினாரென உரைகாரர் கூறுகின்றனர். சங்கத் தொகைநூல்களில் புத்தர் சமணர் முதலிய சமயத்தவரைப் பற்றிய குறிப்புகள் இன்மையின் இது பொருந்தாமை யுணரப்படும்'' (1977:358) என ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் கூறும் கருத்துக்கள் முரணாகும் நிலையில் சமணச் செல்வாக்கின் உச்சநிலையை வெளிப்படுத்துவனவாகத் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் சமணமதம் சார்ந்தவையாக அமைந்திருப்பது சங்ககாலம் பற்றிய பார்வையில் நாம் கைக்கொள்ள வேண்டிய புதிய நோக்கைத் இந்த நூல் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச்சங்கங்கள் அமைக்கப்பட்டதும் சங்கநூல்கள் தொகையாக்கம் செய்யப்பட்டதுமாகக் கூறப்படும் பாண்டிநாட்டில்தான் இந்தக் கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன என்பது சங்க இலக்கியம், சங்கம் குறித்த பார்வையில் புதிய நோக்கை முன்வைக்கவேண்டியதன் தேவையை இந்த நூல் வெளிப்படுத்தியுள்ளது. இதனால்தான் இந்த நூல் பற்றிய அறிகம் தமிழ்ச் சமுதாயத்தில் புதியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கல்வெட்டியல், தொல்லியல், நாணயவியல், மொழியியல் ஆய்வுகள் மட்டுமல்ல இலக்கியம் குறித்த ஆய்வுகளையும் இந்தப் பிராமிக் கல்வெட்டுகளுடன் இணைத்தே ஆராய வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

2. தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் ஆய்வுகளும்

பிராமி 1 கி.மு. 2 - 1, பிராமி 2 கி.பி. 2 - 4, வட்டெழுத்து கி.பி. 4 - 6 எனும் ஐராவதம் மகாதேவனின் (ப.95) இந்தக் காலவரையறையை அப்படியே வைத்துக்கொண்டு ஆராய்பவரும் (ஆர்.செண்பகலட்சுமி, 2004, கார்த்திகேசு சிவத்தம்பி, 2004) இந்தக் கால வரையறையில் மாற்றம் தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்பவரும் (கா. ராஜன், 2004) என இருவேறு நிலையினராகத் தமிழ் அறிஞர்கள் உள்ளனர்.

''தமிழ் எழுத்து முறைக்கு வந்தது கி.மு.3 நூற்றாண்டிலேயேயென மகாதேவன் கூறுவது முக்கியமானதாகின்றது. இதுவொரு முக்கியமான விடயமாகும். அதாவது சங்க இலக்கியங்கள் இந்த எழுத்துரு வளர்ச்சிக்குப் பிற்காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். இக்கட்டத்திலேயே இப்பிராமி எழுத்துரு நிலை கி.பி.4ஆம் நூற்றாண்டில் முடிவுறுகின்றது என்ற இவ்வாசிரியரின் முடிவு முக்கியமானதாகின்றது'' (2004:127) என ஐராவதம் மகாதேவனின் காலவரையறையை ஏற்று சங்க வரலாற்றை, இலக்கிய உருவாக்கத்தை ஆராயும் கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்து மேலாய்விற்கும் மறுஆய்விற்கும் உட்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது.

சங்ககாலச் சமுதாயத்தைத் தொல்லியல் நோக்கில் ஆராய்ந்த கா. ராஜன் குறிப்பிடும் பின்வரும் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன.

'' இக்குறியீடுகள் தமிழ்ப் பிராமி வரிவடிவம் தமிழகத்தில் தோன்றுவதற்கு முன்பாகவே மக்களின் எண்ணங்களை ஒலி வடிவமாகவோ, கருத்து வடிவமாகவோ வெளிப்படுத்தக் கூடிய கருவியாக விளங்கியிருக்க வேண்டும் என்பதும், இவை பரந்த அளவில் கிடைப்பதால் இக்குறியீடுகளின் மூலம் பண்பாட்டுப் பரவல்கூட நிகழ்ந்திருக்கலாம் எனவும் எண்ணவேண்டியுள்ளது'' (2004:47).

''பல்வேறு தரவுகளை நுணுகிப் பார்க்கும் பொழுது தமிழ்ப்பிராமி ஐ ம் மற்றும் ஐ ஐ ம் கலந்தே தொடக்ககாலம் முதலே தமிழகத்தில் கிடைப்பதாக இப்பொழுது கருத வேண்டியுள்ளது'' (மேலது,62).

''கொடுமணலில் கிடைக்கும் தமிழ்ப்பிராமி வரிவடிவத்தின் காலம் கி.மு .400 வரை பின்னோக்கிச் செல்வதை உணரலாம்'' (மேலது,66).

''கொடுமணலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றின் காலத்தை அசோகருக்கு முன்பாக எடுத்துச் செல்லவேண்டியுள்ளது'' (மேலது,73).

எனும் இவர்தம் கருத்துகள் எளிதாகப் புறந்தள்ளிவிடக் கூடியனவாக இல்லை. தொல்லியல் சான்றுகளுடன் இணைத்துச் சங்ககாலத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு முடிவுகளை உளங்கொண்டு பார்க்கின்றபொழுதுதான் சங்க காலக் கவிதைகளின் உருவாக்கம் அவை காலந்தோறும் கையளிக்கப்பட்டவிதம் தொகையாக்கம் செய்யப்பட்ட சூழல் போன்றவற்றின் காலத்தைச் சமுதாய வளர்ச்சிப்போக்கோடு இணைத்து ஆராய முடியும்.

ஐராவதம் மகாதேவன் தரும் தமிழ் பிராமிக் கல்வெட்டுத் தகவல்களை மன்னர் காலநிரல், வைதீகச் செல்வாக்கு, வேளாண் பொருளாதார வளர்ச்சி, சங்கநூல் தொகையாக்கம் எனும் இவற்றுடன் இணைத்து ஆராயவேண்டியுள்ளது. எப்படிச் சங்க இலக்கியம் தருகின்ற தகவல் சமணம் சாராததாக உள்ளதோ அதே போல் பிராமிக் கல்வெட்டுகள் தரும் தகவல் வைதீகம் சாராததாக உள்ளது. எனவே இவ்விரண்டையும் இணைத்து நோக்குகின்ற பொழுதே சங்க இலக்கியப் புரிதல் உண்மையாகும்.

3.மன்னர் காலநிரல்

ஐராவதம் மகாதேவன் தம் நூலில் காட்டியுள்ள மன்னர்கள் சிலர் சங்ககால மன்னர்களாகவும் சிலர் அவர்களுக்கு முற்பட்டவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இந்தக் காலநிர்ணயத்தில் உள்ள சிக்கல்களை முன்வைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

3.1.பாண்டியன் - நெடுஞ்செழியன்

கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் நெடுஞ்செழியன் சங்க இலக்கியம் குறிப்பிடும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோர் அல்ல இவன் இவர்களின் மூதாதையன் என்கிறார் ஐராவதம் (ப.116). ஆனால் இந்த நெடுஞ்செழியன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் இருப்பதாகக் கருத மிகுதியும் வாய்ப்புண்டு.

பேர் இசைக் கொற்கைப் பொருநன் வென்வேல்

கடும் பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்

மலைபுரை நெடுநகர் கூடல் நீடிய

மலிதரு கம்பலை (அகம். 296:10 - 13)

எனும் பாட்டில் கொற்கைப்பொருநன் எனவும் நெடுஞ்செழியன் எனவும் குறிப்பிடப்பெறும் மன்னன் இவனாக இருக்க மிகுதியும் வாய்ப்புள்ளது. இந்தப் பாடலைப் பாடியவர் மதுரைப் பேராலவாயார். இவரின் காலத்தை கே.என்.சிவராஜபிள்ளை(1932) கி.பி. 1 - 25 என்கின்றார். இந்த மன்னன் வேறு இரு மன்னர்களுடன் கூடல் போரில் ஈடுபட்ட குறிப்பு பரணர் பாடிய அகநானூற்றுப்பாடலில் (116) இடம் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரின் காலவரையறையில் உள்ள காலவேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாது இந்தச் செழியனை மகாதேவன் சுட்டும் நெடுஞ்செழியனாகக் கருதலாம்.

""கருப்பு, கருப்பு- சிவப்பு பானை ஓடுகளும் அவற்றின் தமிழ்பிராமி எழுத்தில் பொறிக்கப்பெற்ற சங்ககாலத்திற்கே உரித்தான மாறன், ஆதன் போன்ற பெயர்களும் கிடைத்துள்ளமை கொற்கையின் வரலாற்றுச் சிறப்பைக் காட்டுவதாகும். கரிப்பகுப்பாய்வு (இ14) முறையில் கொற்கை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களுக்கு கி.மு.785 எனக் காலம் கணிக்கப்பட்டது"" (2001:39,40) என, பா.ஜெயக்குமார் குறிப்பிடும் காலநிர்ணயத்தைக் கருத்தில்கொண்டு பேராலவாயார் சுட்டும் நெடுஞ்செழியனை மகாதேவன் காட்டும் நெடுஞ்செழியனாகக் கருதலாம். மகாதேவனின் காலநிர்ணயத்தை மறுநிர்ணயம் செய்வதற்கு இந்த ஒப்பீடு பெரிதும் பயன்படும்.

3.2.சேரன் ­ இரும்பொறை மரபினர்

கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக மகாதேவன் குறிப்பிட்டுள்ள புகலூர் கல்வெட்டில் உள்ள கோ ஆதன் சேரல் இரும்பொறை, பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோ மூவரையும் முறையே செல்வக்கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப்பத்து 7ஆம் பத்து), பெருஞ்சேரல் இரும்பொறை (8ஆம் பத்து), இளஞ்சேரல் இரும்பொறை (9ஆம் பத்து) ஆகியவர்களோடு இணைத்துக் காட்டியுள்ளார் (ப.117). இது ஏற்புடையதே என்றாலும் காலநிர்ணயம் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது. செல்வக்கடுங்கோ முதலான மூவரையும் முறையே 25­-50அஈ, 50­-75 அஈ, 75- ­ 100 அஈ எனக் காலவரிசைப்படுத்தியுள்ளார் கே.என். சிவராஜபிள்ளை (1932). இவர்களில் பெருஞ்சேரல் மோசிகீரனாரால் பாடப்பட்டுள்ளான் (புறம்.50). மோசிகீரனார் ஆயைப் பாடிய பாடல் புறநானூற்றில் இல்லை என்றாலும் பெருஞ்சித்திரனார் பாடலில் மோசிய பாடிய ஆய் (158) எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஆயண்டிரன் 1 ­ -25 அஈ க்கு உரியவனாகக் காட்டப்பட்டுள்ளான் (கே.என். சிவராஜபிள்ளை, 1932). எனவே மோசிகீரனாரால் பாடப்பட்ட பெருஞ்சேரலும் இந்தக் காலத்திற்கு உரியவனாகின்றான். இவ்வாறு ஒவ்வொரு மன்னர் பற்றிய காலநிரலையும் முன்னே தள்ளவேண்டியதாக உள்ளது. எனவே இளஞ்சேரல் இரும்பொறைக்கு உரிய கி.பி. 2 எனும் காலவரையறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது.

செல்வங்கடுங்கோ வாழியாதன் பற்றிய 67 ஆம் பாடலில் "கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்" எனவும் பெருஞ்சேரல் இரும்பொறை பற்றிய 74ஆம் பாடலில் "கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்" எனவும் கொடுமணம் பற்றிய குறிப்பு வருவதால் இவர்கள்தம் காலத்தைக் கொடுமணல் அகழாய்வின் சான்றுகளுடன் இணைத்து வரையறுக்க வேண்டியுள்ளது.

3.3.சோழன் - தித்தன்

கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரூர் அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டுள்ள தித்தன் உறந்தைத் தித்தன், தித்தன் வெளியன் எனும் இருவரோடு நேரடித் தொடர்பு உடையவன் அல்லன் என்கிறார் மகாதேவன் (ப.119). தித்தனை

மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்

பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்

கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம் (அகம்.6)

நொச்சிவேலித் தித்தன் உறந்தை (அகம்.122)

எனப் பரணர் குறிப்பிட்டுள்ளார். முதுகூற்றனார் எனும் புலவர் நற்றிணையில் வீரைவேண்மான் வெளியன் தித்தன் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்விருவரையும் ஐராவதமும் சிவராஜபிள்ளையும் ஒருவராகவே கொண்டுள்ளனர். தித்தன் மகனாகத் தித்தன் வெளியன் குறிப்பிடப்பட்டுள்ளான். இந்தத் தித்தன் வெளியனைப் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்கின்றார் கே.என்.சிவராஜபிள்ளை. போர்வைக் கோப்பெருநற்கிள்ளி சாத்தந்தையாராலும் (புறம். 80­-82) நக்கண்ணையாராலும் (புறம்.83 - 85) பாடப்பட்டுள்ளான். இவற்றில் 80ஆம் பாடலில் "வெல்போர்ப், பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம" எனும் குறிப்பு வருவதால் இந்த மன்னன் தித்தன் எனக் கொள்ளப்பட்டுள்ளான். இந்தத் தித்தன் வெளியனைப் பரணர் அகநானூற்றின் 152ஆம் பாடலிலும் 226ஆம் பாடலிலும் குறிப்பிட்டுள்ளார். இவன் கங்கன், கட்டி, நன்னன், ஏற்றை எனும் குறுநில மன்னர்களோடு போரிட்டவனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான். கே.என். சிவராஜபிள்ளையின் காலக்கணிப்புப்படி தித்தன் 50­-25ஆஇ ஐயும் தித்தன் வெளியன் ஆஇ 25- ­ 1 அஈ ஐயும் சார்ந்தவர்களாக உள்ளனர். ஐராவதம் குறிப்பிடும் கரூர் மோதிரக் காலமும் தித்தன் வெளியன் காலமும் ஏறக்குறைய ஒத்துப் போவதால் தித்தனை உறந்தை தித்தன் எனக்கொண்டு அவர் தரும் காலத்தை மறுநிர்ணயம் செய்யலாம்.

3.4.அதியமான் நெடுமானஞ்சி

ஜம்பைக் கல்வெட்டு காட்டும் சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சியோடு ஒப்பவைத்துக் கருதப்படும் அதியமான் ஐராவதம் தரும் காலக்கணிப்பின்படி கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு உரியவன் ஆகின்றான். ஆனால் இவரே, இவனோடு போர்புரிந்தவனாகக் காட்டும் பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனான இளஞ்சேரலிரும்பொறையின் காலத்தைக் கி.பி. 2 எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் பெருஞ்சேரலிரும்பொறையையும் இந்தக் காலப் பகுதியைச் சார்ந்தவனாக கருதலாம். அதியமானிடமிருந்தே இவன் தகடூரைக் கைப்பற்றினான் எனும் இவர் கருத்து இவர் தரும் காலவரையறைப்படி பொருந்தாததாக உள்ளது. எனவே இது மறுஆய்வுக்கு உட்படுத்தத் தக்கதாயுள்ளது. அதியமான் நெடுஞ்மானஞ்சியைப் பாடியவர்கள் ஒளவையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர். ஒளவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப் போர் தந்த உக்கிரப்பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோரை பாடியுள்ளார் (புறம். 367). இவர்களில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியோர் பாண்டரங் கண்ணனார் (புறம்.16) வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் (புறம். 125) ஆகியோர். பேரிசாத்தனார் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடியுள்ளார்(புறம் 125). இந்தச் சோழனை உலோச்சனாரும் பாடியுள்ளார் (புறம்.377). எனவே இந்தப் புலவர்களும் மன்னர்களும் குறிப்பிட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவர்களாகின்றார்கள் என்பது வெளிப்படை. இவர்கள் கே.என். சிவராஜ பிள்ளை தரும் காலக்கணிப்பின்படி 150 - 175 அஈ க்கு உரியவர்கள் என்பதால் அதியமானும் இந்தக் காலகட்டத்திற்கு உரியவனாகின்றான். இந்நிலையில் பெருஞ்சேரல் இரும்பொறையின் காலகட்டமும் அதியமான் காலகட்டமும் ஒன்றாகின்றன.

4. வைதீகமரபுச் செல்வாக்கு

பிராமிக் கல்வெட்டுகள் காட்டுகின்ற சங்ககாலச் சமுதாயம் ஆங்காங்கே வைதீக தகவல்கள் இடம்பெற்றாலும் முற்றுழுதாகச் சமணம் சார்ந்ததாக உள்ளது. ஆனால் சங்க இலக்கியம் காட்டுகின்ற சமுதாயம் பேரளவில் வைதீகமதச் சார்பினதாக உள்ளது. சங்கத் தொடக்க காலத்தில் நன்கு அறியப்பட்ட மன்னர்களில் ஒருவனான உதியன்சேரலாதன் பற்றிய பாடல்தொட்டுச் சங்ககாலக் கடையெழுவள்ளல்களின், மூவேந்தர் அரசுகளின் வீழ்ச்சியைச் சொல்லும் சிறுபாணாற்றுப்படை வரையிலான எல்லாக் காலகட்டங்களிலும் வைதீகமதமே ஆளுமை உடையதாக உள்ளது. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி ' சங்க நூல்களும் வைதீகமார்க்கமும் ' (1954) எனும் நூலில் இந்த வைதீகமதச் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பிராமிக் கல்வெட்டுகள் சமணர்க்கு மன்னர்கள் செய்த கொடைகள் பற்றிப் பேசுகின்றன. செங்காயபன் எனும் மூத்த சமணத்துறவிக்கு இளஞ்சேரல் இரும்பொறை அரியணையேறியபோது கற்படுக்கை அமைத்துக்கொடுக்கப்பட்டதைப் புகலூர் கல்வெட்டு குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார் மகாதேவன் (ப.117). இது சேரமன்னர்களின் சமணச் சார்பைக் காட்டும் அதேவேளையில் சங்க இலக்கியங்கள் இரும்பொறை மரபினரின் வைதீகச் செல்வாக்கைப் பலபடப் பேசுகின்றன. இவன் தந்தை பெருஞ்சேரலிரும்பொறை பற்றிய பதிற்றுப்பத்துப் பாடல்

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப (74:1,2)

என அவன் வேள்வி செய்ததைக் குறிப்பிட்டுள்ளது. இவன் தந்தையான செவ்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர் ஒரு அந்தணப் புலவர். இவர்தம் பாடலில்

அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய

உரைசால் வேள்வி முடித்த கேள்வி

அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு

இருஞ்சேறு ஆடிய மணம்மலி முற்றம் (69: 3 - 6)

எனவும்

வேள்வியல் கடவுள் அருத்தினை கேள்வி

உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை (70:18,19)

எனவும் வேள்விவேட்ட சேரனின் இயல்பு பாடப்பட்டுள்ளது.

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பதி. 63:1)

இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறம். 19,20)

என்றெல்லாம் பார்ப்பார்க்குப் பணிவது அரசர் கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கபிலர் இருங்கோவேளிடம் ' அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே ' (புறம்.201:7), ' யானே பரிசிலன் மன்னும் அந்தணன் ' (200:13) எனக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பார்ப்பனச் செல்வாக்கு மிக்கிருந்தது. பார்ப்பார்க்குத் தீங்கு செய்வது பெரும் பாவமாகவும் (புறம்.34:3) பார்ப்பார் நோவன செய்யாமை அரசர் நல்லியல்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. வேந்தர்களிடம் மிக்கிருந்த இந்தப் பார்ப்பனச் செல்வாக்கைக் குறுநிலமன்னர் சிலரிடமும் காணமுடிகின்றது. மலையமான் திருமுடிக்காரியின் நாடு 'அழல் புறந்தரும் அந்தணரது' (புறம்.122) எனப் புகழ்பெறுகின்றது. இவையெல்லாம் பிராமிக் கல்வெட்டுகள் காட்டாத சங்ககாலத்தின் மறுபக்கங்களாக உள்ளன.

அகநானூற்றில் வரும்

உண்ணாமையின் உயங்கிய மருங்கின்

ஆடாப் படிவத்து ஆன்றோர் (123:1,2)

எனும் வரிகள் சமணத்துறவிகள் பற்றிய குறிப்பாக இடம்பெற்றிருத்தல் போல ஆங்காங்கே சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் காலமாகக் கி.பி 75 - 100அஈ குறிப்பிடப்பட்டுள்ளது(1932). கோப்பெருஞ்சோழன் (புறம். 212 - 223), சேரமான் பெருஞ்சேரலாதன் (புறம். 65) ஆகியோர் சல்லேகணை எனப்படும் சமண நெறிப்படி வடக்கிருந்து உயிர் துறந்தமை சமணச் செல்வாக்கு அரசர்களிடம் இருந்தமைக்கான சான்றுகளாக உள்ளன. வேள்வியுடன் அந்தணர் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்ற மதுரைக்காஞ்சியில் சாவகர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. (475-­488). ''சங்ககால மக்கள் சமய வாழ்விலே சமணபெளத்தரின் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்ததென்பது தெளிவாகின்றது'' எனக்கூறும் சு.வித்தியானந்தனின் (1971:171) கூற்று சங்க இலக்கியத்தரவைப் பொறுத்தவரை உண்மையெனினும் பிராமிக் கல்வெட்டுச் சான்றுகளைப் பொறுத்தமட்டில் முரணாக உள்ளது.

சமணச் செல்வாக்கு பரவலாக இருந்தமைக்கான முக்கியச் சான்றாக உள்ளது ஆவூர் முலங்கிழாரால் பாடப்பெற்ற சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் பற்றிய 166ஆம் புறப்பாடல். சங்ககால வரலாற்றில் எட்டாம் தலைமுறை சார்ந்தவனாக 125 - 150 அஈக்கு உரியவனாகக் காட்டப்பெறும் இந்த மன்னன் பற்றிய பாடல் சங்கச் சமயவரலாற்றில் முக்கிய இடம்பெறும் பாடலாக உள்ளது.

ஒன்று புரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொரு துநூல்

இகல்கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோன் மருக (3 - 9)

எனும் இந்தப்பாடல் வைதீகச் செல்வாக்கின் உச்சநிலைச் சான்றாக இருப்பதுடன் சமணப் பிணக்கு இருந்தமைக்கான சான்றாகவும் உள்ளது. ஆறு அங்கங்களை உடையதாகிய வேதநெறிக்குப் புறம்பான வேற்றுச் சமயத்தவர் வேறுபாட்டை மிகுதியும் கெடுத்தல், வேற்றுச் சமயத்தவரின் மெய்போன்ற பொய்யை அறிந்து அதை ஏற்காமல் உண்மைப் பொருளை அவர்கள் ஏற்பச் சொல்லி இருபத்தொரு வேள்வியையும் முடித்த அறிவுடையோர் வழி வந்தவன் என விண்ணந்தாயன் புகழப்பட்டுள்ளான். இவன் முன்னோர் மதவாதத்தில் ஈடுபட்டமைக்கான சான்றாக இது உள்ளது. பிராமிக் கல்வெட்டுகள் காட்டும் சமணச் செல்வாக்கும் சங்கஇலக்கியம் காட்டும் வைதீகச் செல்வாக்கும் இந்தப் பாடல் சுட்டும் மதப்பிணக்கு / மதவாதம் இருந்திருத்தல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பிராமிக் கல்வெட்டுகளின் முற்காலம் (கி.மு. 2 - 1) பிற்காலம் (கி.பி. 2 - 4) ஆகிய இரு காலங்களிலும் அரசர் வணிகர் ஆகியோர் சமண ஆதரவாளர்களாக இருந்து அதை வளர்த்தெடுத்ததை மகாதேவன் குறிப்பிட்டுள்ளார் (2003:135). இதன் மறுபுறத்தே சங்ககால வேந்தர்களிடம் வைதீக ஆதரவு பேரளவில் இருந்ததை மேற்காட்டிய சங்கஇலக்கியச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இதைப் போலவே சமண ஆதரவாளர்களாகக் காட்டப்பெறும் வணிகரிடமும் வைதீகச் செல்வாக்கு இருந்ததைப் பின்வரும் பட்டினப்பாலை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்

நல்லா னொடு பகடு ஓம்பியும்

நான்மறையோர் புகழ் பரப்பியும்

பண்ணியம் அட்டியும் பசுபதங் கொடுத்தும்

புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை

கொடுமேழி நசை யுழவர்

நெடு நுகத்துப் பகல் போல

நடுவு நின்ற நன் நெஞ்கினோர் (200 - 207)

என வணிகர்கள் அமரர் பேணி, ஆவுதி அருத்தி, நான்மறையோராகிய அந்தணர் புகழ் பரப்பியவராகச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

5. வணிகம் வேளாண்மையும்

சங்ககாலம் உள்நாட்டு வணிகம் வெளிநாட்டு வணிகம் பேரளவில் நிகழ்ந்த காலமாக உள்ளது. பட்டினங்களின் வளர்ச்சி அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றைச் சங்க இலக்கியங்கள் பரவலாகக் காட்டியுள்ளன. கொற்கை, புகார், முசிறி போன்ற துறைமுகங்களில் நடந்த வணிகப் பொருளாதாரம் சங்கஇலக்கியங்களில் (மது.135­-138, பட். 118 - 141, அகம். 149: 9 - 11) பரவலாகப் பாடப்பட்டுள்ளது. ஆரம், மிளகு, த்து போன்ற பொருட்களின் வெளிநாட்டு வணிகத்தையும் வணிகரின் வளமான வாழ்வையும் பெரும்பாணாற்றுப்படை வெகுவாகப் பாடியுள்ளது. (325:335).

இந்த வணிகப்பொருளாதாரத்தின் மறுபுறத்தே மருதவேளாண் பொருளாதாரமும் பேரளவில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நிர்வள நிலவளப் பெருக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க (ஐங். 1:2)

நெல்லுடை நெடுநகர் (புறம். 287:9)

என நெல்லையும்

அறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர்

வருநர் வரையா வளம் வீங்கிருக்கை (பதி. 75:6,7)

எனக் கரும்பையும்

தண்பணை தழீஇய தளரா இருக்கை (பொரு. 169)

மருதம் சான்ற மருதத் தண்பணை (மது. 270)

மென்புனல் வைப்பினித் தண்பணை யூரே (புறம். 341:19)

என மருதநிலத்தையும் முன்வைத்து நாடுகள் புகழப்பட்டுள்ளன. இந்த மருதநிலப்பெருக்கமே/ வேளாண் பொருளாதார பெருக்கமே ஒரு மன்னனின் உயர்வுக்கு, நிலைபெற்ற ஆட்சிக்கு, பிற மன்னர்களை வென்று பெருமன்னனாக உயர்வதற்கு வழி என்பதைக் குடபுலவியனார் எனும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வலியுறுத்திய புறநானூற்றுப் பாடல் (18) மருதநிலப் பெருக்கத்தின் அவசியத் தேவையை, புன்செய் விளைநிலங்களின் இழிவைப் பாடியுள்ளது. முத்து வணிகம் சிறப்புற்றிருந்த பாண்டி நாட்டில் பாண்டியமன்னனிடம் வேளாண்பொருளாதார வளர்ச்சி வலியுறுத்தப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

''இக்கல்வெட்டுப் பரம்பலுள்ள பிரதேசம், சிறப்பாகக் கூறினால் இக்கல்வெட்டுகளைப் பொறிப்பித்தவர்களுக்குத் தளமாகவுள்ள வேளாண் நடவடிக்கைகள் நன்கு ஒழுங்கமைக்கப் பட்டனவாகவே தென்படுகின்றன. வேளாண்மைக்கான உற்பத்திக் கருவிகள் (இரும்பாலான கொழு. கரும்பு இயந்திரம் ) முக்கியமாகின்றன...கலப்பைக்கான ஏர்க்கொழு வணிக அளவில் விற்பனை செய்யப்பட வேண்டிய அளவிற்கு உற்பத்தி தேவைப்பட்டதெனில் விவசாயம் (கமச்செய்கை) எந்த அளவிற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவருகிறது'' (2004:135,136) எனக் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடும் நிலையில் மருத வேளாண்மை முக்கியப்பட்ட காலமாகச் சங்ககாலம் இருந்துள்ளது.

இவ்வாறு வணிகமும் வேளாண்மையும் மேன்மையுற்ற நிலையில் நெல்லும், நெல், கரும்பு போன்ற நன்செய் விளைபொருட்களுக்கு ஆதாரமான நீரும் எளிய பொதுப்பயன்பாட்டிற்கான ஆதாரங்களாக மாறியுள்ளன. நெல் பண்டமாற்றிற்கான ஆதார உணவுத்தேவையாக மாறிப் போகின்றது. நெல்லும் உப்பும் நேர், மீனும் நெல்லும் நேர் எனும் நிலையில் நெல் பொதுவான உணவுப் பொருளாகப் பரவலாக்கம் பெறுகின்றது. இந்நிலையால் நெல்லைவிட மன்னன் உயர்ந்தவன் எனும் நிலை உருவாகின்றது (புறம். 186). இத்தகைய சமுதாயச் சூழலில், வேளாண்நிலத்தையும் நீர்வளத்தையும் பெருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்ட பாண்டியர் சதாயத்தில் வணிகப் பொருளாதாரம் தொடர்ந்து தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. வணிகத்திற்கு ஆதாரமான இயற்கை விளைபொருட்கள் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென

வரைய சாந்தமுந் திரைய முத்தமும்

இமிழ் குரன் முரசம் மூன்றுட னாளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே (புறம். 58:10 - 13)

என வணிகப் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்திப் பாடப்பட்டுள்ளது. உமண் சாத்து செய்த உப்புவணிகம் (சிறு. 55, நற். 4:7 - 9) மிளகு வணிகம் (பெரும். 75 - 81) பேசப்பட்ட அளவிற்கு நெல் வணிகம் பேசப்படவில்லை. வேளாண் உற்பத்திப் பொருட்களில் வெகுவாகப் பேசப்பட்ட நெல் உள்ளுர்ப் பண்டமாற்றுப் பொருளாக மாறிய நிலையில் (பட். 29,30) பட்டினப்பாலை (184 - 190) குறிப்பிடும் ஏற்றுமதிப் பொருட்களில் மிளகு, மணி, ஆரம், அகில் முத்து, பவளம் போன்றவையே க்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்நிலையில் வணிகர் வேளாளர் ஆகிய இருவரின் சிறப்பும் அரசரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வேளாளரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. (புறம். 35) மழை பொய்த்தால் அதனால் வரும் வேளாண் வருவாய் குறைந்தால் அரசரையே இந்த உலகம் பழிக்கும் எனவும் போரில் படை தருகின்ற வெற்றி, கலப்பை உழு­­த சாலில் விளைந்த நெல் போன்ற வோளாண் விளைபொருட்களின் பயனே ஆகும் எனவும் கூறி

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது

பகடுபுறந் தருநர் பார மோம்பிக்

குடிபுறந் தருகுவை யாயினின்

ஆடிபுறந் தருகுவர் அடங்காதோரே (35: 31 - 34)

என வேளாளர் பாதுகாப்பு வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் இதற்கு மாறுபட்ட நிலையில் சங்ககாலத் தொடக்கத்தில் ஆண்ட உதியஞ்சேரலிடம்

கூலம் பகர்நர் குடிபுறந் தராஅ

குடிபுறந் தருநர் பார மோம்பி

................................

பூத்தன்று பெரும நீ காத்த நாடே (பதி. 13:23,24,28)

என வணிகரை அரசன் பாதுகாத்ததால் நாடு பெருமைபெற்ற நிலை காட்டப்பட்டுள்ளது. இவ்விரண்டில் வேளாண் பொருளாதாரத்தின் க்கியத்துவத்தை வலியுறுத்தி வேளாளரைப் பாதுகாக்க வேண்டிய தேவை வேண்டிக்கொள்ளப்பட்டதற்கு மாறாக வேளாண் விளைபொருட்களாகிய தானியத்தை ஆதாரமாகக் கொண்ட கூலவணிகர் பாதுகாப்பால் நாடு சிறப்புற்ற நிலை பாடப்பட்டுள்ளது. இது வணிகப் பொருளாதாரத்திற்கு அரசு தந்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக உள்ளது. இதனால்தான் தொல்காப்பியத்திலும் "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே" (கற்பியல், 3) என்பதில் வரும் மேலோர் மூவர் என்பதற்கு அரசர், அந்தணர், வணிகர் எனவும் கீழோர் என்பதற்கு வேளாளர் எனவும் உரை கூறப்பட்டுள்ளது. புறநானூற்றின் 35ஆம் பாடலில் வரும் நொதுமலாளர், பொதுமொழி எனும் சொற்கள் வணிக, வேளாண் பொருளாதார முரண்பாட்டை வெளிப்படுத்தும் சொற்களாக இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஐராவதம் மகாதேவன் காட்டும் பிராமிக் கல்வெட்டுகளில் வேளாண்மை பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெறவில்லை. வணிகம், வணிகச் செய்திகள் என்பன ஓரளவு இடம்பெற்றுள்ளன. வணிகக் குழுவினர் நிறைய கற்படுக்கைகளை அமைத்துத் தந்தமையும் இடம்பெற்றுள்ளது (2003:141). வேளாண் மாந்தர் இத்தகைய செய்கையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கல்வெட்டு, இலக்கியம் இரண்டிலும் இல்லை. எனவே வணிக வேளாண் ரணுக்காக சதாயப் பின்புலம் ஆராயப்படவேண்டியதாக உள்ளது. சங்ககாலத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதிக்காலம் வரையில் வெகுவாகப் பேசப்பட்ட வணிகப் பொருளாதாரம் போல அன்றிப் பிற்காலத்தே வேளாண்பொருளாதாரம் அவ்வளவாக முன்னிறுத்தப்படவில்லை.

6.எழுத்து மரபும் சங்க நூல் தொகையாக்கமும்

வணிகமும் வேளாண்மையும் கி.மு . இரண்டாம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டுகளிலேயே இடம்பெற்றுள்ளதை ஐராவதம் மகாதேவன் காட்டியுள்ளார் (பக். 140,141). இதைப்போலவே சங்க இலக்கியங்களும் ஆரம்ப கால அரசர்களின் காலந்தொட்டே இவ்விருவகைப் பொருளாதாரமும் பேணப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன. எனவே இவ்விரு பொருளாதார ஆவணப்படுத்தத்திற்கான எழுத்தாக்கம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஐராவதம் மகாதேவன் கி. மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதி கி.மு .2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பதைத் தமிழகத்தின் எழுத்துருவாக்க காலமாகக் காட்டியுள்ளார். சங்க இலக்கிய காலம் கிறித்துவ ஆண்டின் தொடக்கம் என்கின்றார் (ப.159).

""தமிழ் வழங்கிய பகுதிகளில் மாத்திரம், இந்தத் தமிழ்பிராமி எழுத்துரு முறைமை காணப்படுகின்றது. இதுவொரு முக்கிய வரலாற்றுத் தடயமாகும். அதாவது பிராமி எழுத்துரு மூலம் எழுதப்பட வேண்டிய அளவிற்கு தமிழ்மொழிச் செல்வாக்கு வலுவுள்ள ஒன்றாக விளங்கியிருத்தல் வேண்டும்"" (2004:125) எனும் காத்த்திகேசு சிவத்தம்பியின் கூற்று எழுத்து வழக்கிற்குத் தமிழைக் கொண்டுவர வேண்டிய ஒரு சமுதாயத் தேவை இருந்ததை வெளிப்படுத்துகின்றது. இந்தக் காலக்கட்டத்திற்கு முன்பே குறியீடுகள் எண்ண வெளிப்பாட்டிற்கான ஊடகங்களாகப் பயன்பட்டதை கா.ராஜன் எடுத்துக்காட்டியுள்ளார். (2004:47). ஆக எழுதும் முறை என்பது தமிழ் பிராமிக்கு முன்பே இருந்துள்ளதும் தமிழ் பிராமி எழுத்துமுறைக்குப்பின் தமிழ் எழுத்துமுறை தொடர்ந்து சீர்ப்பட்டு வளர்ந்து வந்து வட்டெழுத்தில் நிலைபெற்றுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கி. மு. இரண்டு முதல் கி.பி. 4 வரையில் கிடைக்கும் மட்பாண்ட எழுத்துப் பொறிப்புகளால் பொதுமக்கள் மத்தியிலும் எழுத்துப் பண்பாடு இருந்தமை உறுதிப்படுகின்றது.

""இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இது பாணரிலிருந்து புலவருக்கு வருவதான ஒரு மாற்றமாகப் பார்க்கலாம்... சங்க இலக்கியத் தொகுதியென நாம் கொள்ளும் பாடல்கள் யாவுமே புலவர்களின் ஆக்கங்கள் என்ற அடிப்படையிலேயே நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளன...புலவர்கள் பாடுகின்ற மரபே முக்கியப்படுத்தப்படுகின்றது அல்லாமல் எழுத்துமரபு அன்று. எனினும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அறிவு கல்வி கேள்விகளால் வந்த அறிவாகும்"" (2004:145,146) எனக்கூறும் கார்த்திகேசு சிவத்தம்பி ""எழுதப்படும் மரபு படிப்படியாக சங்க இலக்கிய காலத்தினூடேயே வளர்ந்து வருகின்ற ஒன்றாக கருதப்படலாம் போலத் தெரிகின்றது"" (மேலது 147) என்கிறார்.

புலவர்

பாடி ஆனாப் பண்பின் பகைவர் (புறம். 120:18,19)

புலவர்

பாடுதுறை ற்றிய கொற்ற வேந்தே (புறம். 21:10.11)

புலவர் பாடும் புகழுடையோர் (புறம்.27:7)

யாங்கனம் பாடும் புலவர் (புறம்.30:11)

புலவர் பாடாது வரைக என் நிலவரை (புறம். 72:16)

ஒருவர் புகழ்வார் செந்நாப் புலவர் (புறம்.107:2)

பீடுகெழு மலையற் பாடியோரே (புறம். 124:5)

கொண் பெருங்கானம் பாடலெமக் கெளிதே (புறம். 154:13)

புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை (புறம். 228:7)

அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நா (புறம்.235:13)

நாநவில் புலவர் வாய் உளானே (புறம். 282:13)

எனப் பலவாக வரும் இந்தப் புலவர் மரபு பாடல் பாடப்படும் மரபையே கூறினாலும் வாய்மொழி மரபான பாணர் மரபிலிருந்து புலவர் மரபுக்கு மாறுகின்ற மாற்றம் எழுத்து மரபையும் உள்ளடக்கிக் கொண்ட மரபாகவும் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்திருக்க வேண்டும். அகவல் என்பது அரசர் பெருமைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப் பயன்பட்ட ஒரு பா வடிவம் என்பதால் அது பாடப்படும் மரபாகவே கூறப்பட்டுள்ளது. புலவர் மரபோடு எழுத்து மரபையும் இணைத்துக் கருதவேண்டியது அவசியம். ""மாங்குடிமருதன் தலைவனாகப்....புலவர் பாடாது வரைக"" (புறம். 72) எனக்கூறும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூற்று புலவர்கள் குழுவாக இருந்த சங்ககால நிலையை வெளிப்படுத்துகின்றது. குழுவாக அமைந்த புலவர் மரபோடு எழுத்து மரபும் இணைந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும். கி.மு.2 முதல் கி.பி. 2 வரையிலான காலப் பகுதியில் இந்தப் பாடல்கள் கையளிக்கப்பட்ட விதத்திற்கு ஊடகம் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. தொடர்ந்து எழுத்து மரபு இருந்திருந்தால் மட்டுமே இவை தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கும். எனவே வணிக வேளாண் பொருளாதாரங்களினூடே வளர்ந்த எழுத்துறையை இலக்கிய வளர்ச்சிக்கும் நாம் விரிவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தொல்காப்பியம் தொகுக்கப்பட்டிருக்க முடியாது என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவதால் (பக்.231) தொல்காப்பிய இலக்கண உருவாக்கத்திற்கான இலக்கியமாக விளங்கும் சங்கத் தொகையாக்கம் அதற்கு முன்பே செய்யப்பட்டிருக்க அல்லது தொடங்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். உதியன் சேரலாதன் போன்ற பெருமன்னர்கள் காலந்தொட்டுப் பாடிய பாடல்கள் எல்லாம் பாதுகாத்து வைக்கப்பட்டதற்கான ஊடகம் நிச்சயமாக வாய்மொழி மரபாக இருந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. சங்க கால அரசு உருவாக்கம் எழுத்து மரபில்லாமல் இருந்திருக்காது என்பதையும் கருத வேண்டியுள்ளது. பதிற்றுப்பத்து திட்டமிட்டுப் பாடப்பட்ட ஒரு மரபில் சேரர் மரபு பற்றிய வரலாற்று ஆவணம் போல உள்ளது. உதியஞ்சேரல் முதல் இளஞ்சேரல் இரும்பொறை வரையிலான அரசர்கள் பற்றிப் பல காலங்கள் சார்ந்த பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு முறையான திட்டமிட்ட எழுத்து மரபு இல்லாமல் வாய்மொழி மரபாகக் கையளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.

சங்கஇலக்கியத் தொகையாக்கத்தில் இருவேறுநிலைகள் உள்ளன. திட்டமிட்ட தொகுப்பு நெறிமுறையை உடைய அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவையும் சேரர் பாடல்களைப் பற்றிய பதிற்றுப்பத்து சேரர் பாடல்களை முதலாவதாக உடைய புறநானூறு, வாழியாதனை வாழ்த்தும் பத்தை முதலாவதாக உடைய ஐங்குறுநூறு ஆகியவை முறையே பாண்டியநாட்டிலும் சேரநாட்டிலும் தொகையாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியத் தொகையாக்கத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவனான யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசன் பெயர் இடம்பெற்றிருப்பதையும் சிறுபாணாற்றுப்படை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மதுரை ""கடுந்தேர்ச் செழியன் தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின் மகிழ் நனை மறுகின் மதுரை"" (65-­67) எனத் தமிழை முதன்மைப்படுத்திப் புகழப்பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டும் சங்கத் தொகை நூல்களின் தொகையாக்க காலத்தை நிர்ணயம் செய்யவேண்டியது அவசியம். இத்துடன் வைதீக மரபின் தாக்கமும் தொகையாக்க மரபில் இருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. பிராமிக் கல்வெட்டுகளும் பாண்டிய சேரநாட்டுப் பகுதிகளிலேயே பரவலாகக் கிடைத்திருப்பதையும் எண்ணித் தொகையாக்க மரபையும் காலத்தையும் ஆராய வேண்டுவது அவசியம்.

7. இலக்கியம், தொல்லியல் சான்றுகள், பிராமிக்கல்வெட்டுகள் எனும் இவை ஒவ்வொன்றும் ஒன்று ஒன்றில் இல்லாத பல புதிய தரவுகளை, பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் இவை பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வே சங்க இலக்கியம் குறித்த உண்மையான முழுமையான புரிதலுக்கு வழிவகுக்கும். பிராமிக் கல்வெட்டுகளைச் சங்கஇலக்கியம், சங்ககாலத் தொல்லியல் சான்றுகள் எனும் இவற்றுடன் இணைத்து நோக்குவது சங்ககாலம், சங்கஇலக்கியம் குறித்த காலநிர்ணயத்தில் மாற்றம் செய்யவேண்டியதன் தேவையை முன்வைக்கிறது. மறு ஆய்வுக்கு உட்படுத்தி செய்யப்பட வேண்டிய இந்தக் காலவரையறையே சங்க இலக்கியங்கள், புலவர், மன்னர், தொகையாக்கம் பற்றிய காலங்களில் பொதுவான ஒரு நோக்கை உருவாக்கும்.

சங்க இலக்கியங்கள் ன்பழந்தமிழ்- ­ பின்பழந்தமிழ், இனக்குழு- ­ அரசு, பாணர் ­ -புலவர், குறுநிலமன்னர் ­ -வேந்தர், புன்செய்- ­ நன்செய் எனும் இருமை முரண்களை முன்வைப்பதைப் போலச் சங்க இலக்கியமும், பிராமிக் கல்வெட்டுகளும் குறித்த ஒப்பீடு வைதீகம் ­ -சமணம், வேளாண்மை- ­ வணிகம் எனும் முரண்களை முன்வைக்கிறது. இந்த முரண்களுக்கான விடைகள் பல்துறைசார் ஆய்வால் மட்டுமே கிட்டும். எனவே எதிர்காலத்தில் செய்யப்படும் சங்க இலக்கிய ஆய்வுகள் பல்துறைசார் நோக்கில் அமையவேண்டியது அவசியம். எனவே எதிர்காலத்தில் இலக்கியம், வரலாறு குறித்த கல்வியில் அந்தந்தப் படிப்புகளுக்கு ஏற்பச் சங்கஇலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மொழியியல் ஆகியவற்றோடு இணைந்த ஒரு பாடம் இருக்கவேண்டியது அவசியம். இன்றைய இந்த ஆய்வுப் போக்குகளைத் தொடர்ந்து மேலெடுத்துச் செல்ல இவ்வகைப் பாடத்திட்டம் பெருந்துணை புரியும்.

ஆய்வுத்துணை நூல்கள்

அகநானூறு, 1958.மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

ஐங்குறுநூறு, 1957.மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

கார்த்திகேசு சிவத்தம்பி, ஜீலை 2004. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்,

சமூகஅறிவு, தொகுதி - I இதழ் 1-2, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, பக். 103 - 122.

சுப்பிரமணியசாஸ்திரி, பி.எஸ்.,1951. சங்கநூல்களும் வைதீகமார்க்கமும், யுனைடெட் பிரிண்டர்ஸ் அச்சகம், திருச்சிராப்பள்ளி.

தொல்காப்பியம்- ­ பொருளாதாரம் நச்சினார்க்கினியர் உரை, 1973. மறுபதிப்பு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.

நற்றிணை, 1957. மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

பத்துப்பாட்டு, 1957. மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

பதிற்றுப்பத்து, 1957. மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

புறநானூறு, 1958. மர்ரே அண்டு கம்பெனி, சென்னை.

புறநானூறு (1 - 200, 201 - 400) 1977, 1972. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை (உரை), மறுபதிப்பு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.

மாதையன், பெ., 2001. வரலாற்று நோக்கில் சங்கஇலக்கியப் பழமரபுக்கதைகளும் தொன்மங்களும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

ராஜன், கா., 2004. தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

வித்தியானந்தன், சு., 1971. தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை.

ஜெயக்குமார், பா., 2001. தமிழகத் துறைமுகங்கள், அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர்.

Champakalakshmi.R., 2004. Social formation in Early Historical Tamilakam Emerging perspectives, Paper presented in the Symposium on formative phase in South Indian History: The Earliest Tamil ( Brahmi) writings and Recent Arcaeological Discoveries, 6 & 7 , February, Madras Institute of Development Studies, Chennai.

Iravatham Mahadevan, 2003. Early Tamil Epigraphy from Earliest Times to the Sixth Centuary A.D., Cre-A, Chennai and The Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A.


--
தியாகு

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்