உலகம் எட்டு சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த டுவிட்டர்

எட்டு சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த டுவிட்டர்

பதிவர்: நிர்வாகி, வகை: உலகம்  
படம்

அக் 13,2015:- டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாகப் (சி.இ.ஓ.) பதவியேற்ற ஒரே வாரத்தில், இதன் எட்டு சதவிகித ஊழியர்களை நேற்று பணி நீக்கம் செய்துள்ளார்.

அதிலும், யாரை வேலையிலிருந்து நீக்கப்போகின்றோம் என்கிற அறிவிப்பின்றி அதிர்ச்சியளிக்கும் விதமாக திடீரென 336 என்ஜீனியர்கள் தமது பணியை இழந்துள்ளனர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் தொடங்கப்பட்ட டுவிட்டர் நிறுவனம், சக போட்டியாளர்களான இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக்கைத் தாண்டி பெரிய அளவில் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது.

ஆகவே, புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜாக், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் விதமாகவும், நிறுவனத்தை மேம்படுத்தும் எண்ணத்திலும் 336 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், வீட்டிலிருந்தே இந்நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்த பார்ட் என்பவர், நேற்று காலை தனது டுவிட்டரின் அலுவலக மெயிலை திறக்க முயற்சித்தபோதுதான் தான் பணியை இழந்துவிட்டோம் என உணர்ந்து கொண்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த நிறுவனம் அலுவலக மெயில் மூலமாக தகவல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், அதை திறந்து பார்க்கும் முன்பே அந்த மெயிலை உபயோகிக்கும் வசதியை டுவிட்டர் நிறுத்திவிட்டது.

டுவிட்டர் இதுவரை தனது பயனீட்டாளர்களை 30 கோடிக்கும் அதிகமாக உயர்த்த முடியவில்லை. ஆகவே, லாபம் சம்பாதிக்க பணி நீக்கம் செய்துள்ளது. இதன்மூலம் 10 மில்லியன் முதல் 20 மில்லியன் வரை (இந்திய மதிப்பில் ஆறரை கோடி முதல் பன்னிரண்டு கோடி) செலவீனங்கள் குறையும் எனவும், இதைக்கொண்டு நிர்வாகத்தை மாற்றியமைக்கும் திட்டங்களுக்காக செலவிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்