இந்தியா - பாக். அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ஒபாமா

‘‘இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்து கொள்ள வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில், ‘அணுஆயுத பாதுகாப்பு மாநாடு’ கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:
அணு ஆயுதங்களை அதிகமாக வைத்திருக்கும் அமெரிக்காவும் ரஷ்யாவும் அவற்றின் எண்ணிக் கையை குறைத்து, உலக நாடு களுக்கு வழிகாட்டியாக மாற வேண்டும்.
அதுவரையில், சர்வதேச அளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது.
மேலும், பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். ராணுவ பலத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த இரு நாடுகளும் தொடர்ந்து தவறான பாதையில் பயணிக்க கூடாது.
கொரிய பிராந்தியத்தில் வடகொரியா நாடு அச்சுறுத்தலாக உள்ளது. அந்த நாட்டின் நடவடிக் கைகளை முறியடிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்காகத்தான் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்தினேன். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நாம் எல்லோரும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.