20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல்!

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாச்சலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் ‘என்கவுன்டர்' என்ற பெயரால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம், 20 தமிழர்கள் என்கவுன்டரின்போது செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
பல்வேறு தரப்பிலும் நிர்ப்பந்தங்கள் வந்ததின் பேரில், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அது அமைத்தது.
இந்நிலையில் இன்று சிறப்பு விசாரணை குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆந்திர போலீசார் மீதான குற்றசாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.