தினம் ஒரு கைபிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை போதும், உங்கள் ஆயுள் கூடும்

ஜூன்.15, 2015:- தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்தில் நெதர்லாண்ட் நாட்டில் உள்ள மாஸ்டிரிக்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினந்தோறும் வேர்க்கடலை அல்லது பாதாம் பருப்பு உண்பவர்களுக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளான மாரடைப்பு, புற்று நோய், சுவாசக் குழாய் நோய்கள் போன்றவை ஏற்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.
இது போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வராமல் இருப்பதற்கு காரணம் அவற்றில் காணப்படும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், மாமிசம், நெய் போன்றவற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைப் போல் இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை என்றும், இவற்றில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வரவிடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இவற்றை தினந் தோறும் உண்டு வந்தால் ஆபத்தான நோய்களில் இருந்து நம்மைக் காத்து கொள்வதுடன், பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன