தமிழ்நாடு ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் தேர்வானது எப்படி?

ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் தேர்வானது எப்படி?

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.31, 2015:-  கடந்த, 2002ம் ஆண்டில், ஜனாதிபதி பதவிக்கு தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து, 'டர்னிங் பாயின்ட்ஸ்: ஏ ஜார்னி த்ரு சேலஞ்சஸ்' என்ற தனது புத்தகத்தில், முன்னாள்ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளதாவது: மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், 2001 டிசம்பர் முதல், அண்ணா பல்கலையில் பணியாற்றி வந்தேன். அப்போது, அண்ணா பல்கலையின் பரந்து விரிந்த வளாகத்தில் தங்கியிருந்ததும், பேராசிரியர்கள், ஆராய்ச்சி பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த மாணவர்களுடன் பணியாற்றியதும், பல்கலை மாணவர்களுக்கு பாடம் நடத்தியதும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தன.

கடந்த, 2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி, மற்ற நாட்களைப் போல, மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு, மாலையில், என் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, அண்ணா பல்கலையின் துணைவேந்தரான பேராசிரியர், கலாநிதியும் என்னுடன் சேர்ந்து கொண்டார். உடன் அவர், 'உங்கள் அலுவலகத்தின் தொலைபேசி, பகல் நேரத்தில் அதிக முறை ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ உங்களுடன் பேச தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்' என, தெரிவித்தார்.

இதைக்கேட்டதும், நான் வேகமாக, என் அறைக்கு வந்தேன். கதவை திறந்தவுடன், அறையில் உள்ள தொலைபேசி ஒலித்தது. ரிசீவரை எடுத்ததும், மறுமுனையில் பேசியவர், 'பிரதமர் வாஜ்பாய் உங்களுடன் பேச விரும்புகிறார்' என, தெரிவித்தார். பிரதமரின் இணைப்புக்காக, நான் காத்திருந்த நேரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை மொபைல் போனில் அழைத்தார். அவரிடம் பேசும் போது, 'பிரதமரிடம் இருந்து முக்கியமான அழைப்பு ஒன்று உங்களுக்கு வரும். அவர் சொல்லும் வாய்ப்பை வேண்டாம் என, மறுத்து விடாதீர்கள்' என, கூறினார்.

போனில் வாஜ்பாய்நாயுடுவுடன், நான் மொபைலில் பேசிக் கொண்டிருந்த போதே, பிரதமருடனான இணைப்பு கிடைத்து விட்டது. தொலைபேசியில் பேசிய பிரதமர் வாஜ்பாய், 'என்ன கலாம், உங்களின் ஆசிரியர் பணி எப்படி உள்ளது?' என, கேட்டார். நானும், 'மிக நன்றாக உள்ளது' என, பதில் அளித்தேன்.

அடுத்து பேசிய வாஜ்பாய் கூறியதாவது: தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. நாங்கள் எல்லாம், உங்களை ஜனாதிபதியாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அது தொடர்பான அறிவிப்பை, இன்று இரவே வெளியிட வேண்டும். அதனால், நீங்கள் உடனே, 'யெஸ்' அல்லது, 'நோ' என, பதில் சொல்ல வேண்டும். தே.ஜ., கூட்டணியில், 24 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் மத்தியில், ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். கூட்டணியின் தலைவர் நான் என்பதால், உடனே, இந்த விஷயத்தில், முடிவெடுத்தாக வேண்டும். உங்களின் பதிலை சொல்லுங்கள். இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

அறைக்குள் நுழைந்த நான் உட்காருவதற்குள், இதெல்லாம் நடந்தது. வாஜ்பாய் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், நான் பாடம் எடுப்பது, நாட்டை பற்றிய, என் தொலைநோக்கு எண்ணம் குறித்து, பார்லிமென்டில் உரை நிகழ்த்துவது என, பல காட்சிகள், என் கண்முன்னே தோன்றி மறைந்தன.

உடன் பிரதமரிடம், 'வாஜ்பாய்ஜி, நான் முடிவெடுக்க, இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுக்க முடியுமா?' எனக் கேட்டேன். மேலும், 'நான், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும், ஆதரவு தெரிவிக்க வேண்டும். அது, அவசியமானது' என்றும், அவரிடம் கூறினேன். உடன் அவர், 'நீங்கள் சம்மதம் தெரிவித்து விட்டால், ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது எங்களின் பணி' என்றார். சரி, இரண்டு மணி நேரத்தில், பதில் அளிக்கிறேன் எனக்கூறி, தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், என் நெருங்கிய நண்பர்கள் பலரை, தொலைபேசியில் அழைத்து, வாஜ்பாய் சொன்ன விஷயங்கள் குறித்து விவாதித்தேன். அவர்களில் சிலர், ஆசிரியர் பணியை தொடரும்படியும், சிலர் ஜனாதிபதி பதவியை ஏற்கும்படியும், இரு விதமாக யோசனை தெரிவித்தனர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், வாஜ்பாயை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, 'வாஜ்பாய், நீங்கள் அளிக்க உள்ள பொறுப்பை முக்கியமான லட்சியமாக கருதுகிறேன்.
அனைத்து கட்சி வேட்பாளராகவே இருக்க விரும்புகிறேன்' என்றேன். உடன் அவர், 'ஓகே, அதற்காக நாங்கள் பணியாற்றுகிறோம்; நன்றி' என்று தெரிவித்தார். அடுத்த, 15 நிமிடத்தில், நான் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட விஷயம், நாடு முழுவதும் பரவியது. எனக்கு ஏராளமானோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். எனக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் என் அறையை முற்றுகையிட்டனர்.

காங்கிரஸ் ஆதரவு:


அதேநாளில், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், வாஜ்பாய் ஆலோசித்துள்ளார். அவரோ, 'தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு இறுதியானதா' என, கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, வாஜ்பாயும் ஆமாம் என, பதில் அளித்துள்ளார். இதையடுத்து, 2002 ஜூன் 17ம் தேதி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எனக்கு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்பின், இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் பெற முற்பட்டேன். ஆனால், அவர்கள் தங்கள் கட்சி சார்பில், வேட்பாளரை நிறுத்தி விட்டனர். அடுத்து, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இவ்வாறு கலாம் கூறிஉள்ளார்.

இதன்பின், இரண்டவது முறையாக அப்துல் கலாமை, ஜனாதிபதியாக தேர்வு செய்ய, தே.ஜ., கூட்டணி தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்ட போது, அதை ஏற்க, காங்கிரஸ் தலைவர் சோனியா மறுத்து விட்டார். அப்போது, தி.மு.க., தலைவரான கருணாநிதியும், 'கலாம் என்றாலே கலகம் தான்' எனக் கூறி, அவருக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டார். அதனால் தான், மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை கலாம் இழந்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்