தமிழ்நாடு மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்

மதுவிலக்கு போராட்டத்தின் முதல் உயிரிழப்பு சசி பெருமாள்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூலை.31, 2015:- காந்தியவாதி சசி பெருமாள்(59). காந்திய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றினார். தனது சொந்த கிராமத்தில் வேளாண்மையுடன் நெசவு தொழிலையும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.  அக்குப்ரஷர் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். ஆனாலும் காந்தியின் சத்திய சோதனையை படித்து அவரது கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டார்.

இவருக்கு 18 வயதாக இருக்கும் போது மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தனது முதல் போராட்டத்தை நடத்தினார். அதில் 5 நாட்கள் சிறை தண்டனையும் பெற்றார். சேலம் மாவட்டத்தில் சசி பெருமாள் தனது சக காந்தியவாதிகளுடன் ஒரு குழுவாக இணைந்து போராடினார்.  டாஸ்மாக் வாயிலில் நின்று மது அருந்த வருவோரின் காலில் விழுந்து குடிக்க வேண்டாம் எனக் கேட்டுகொள்வது அவர்களுடைய போராட்ட வழிமுறையாக இருந்தது.

இதே வழிமுறையை சேலத்தை சேர்ந்த டாக்டர் பிரான்சிஸ் ஆசாத் காந்தி என்பவருடன் சேர்ந்து சசி பெருமாளும் பல இடங்களில் செய்து வந்தார். நாடு முழுவதும் மதுவிலக்கு வலியுறுத்தி டெல்லியிலும் போராட்டங்களை நடத்தினார்.

சென்னையில் அவர் 2013ல் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. கடைசியில் பல்வேறு தரப்பினர் வேண்டுகோளை ஏற்று தான் 34 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அப்போது ‘‘என் உயிரைப் பத்தி அக்கறை எடுத்து கொண்ட அளவுக்கு என்னுடைய கோரிக்கைக்கு அரசு  செவி மடுக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவி–்த்தார்.

தற்போது அவரது உயிரை பாதுகாப்பதிலும் அரசு கவனம் செலுத்தவில்லை என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 2014க்குள் மதுவிலக்கு வரவில்லை என்றால் மீண்டும் போராட்டங்களை தீவிரப்படுத்துவேன் என சசிப்பெருமாள் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாகவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட முயன்றார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மதுவிலக்கு வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மது கடைகளை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் தனது உயிரையே விலையாக கொடுத்துள்ளார் சசி பெருமாள். தமிழகத்தில் மதுவுக்கு எதிராக நடந்த முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் முதல் மதுவிலக்கு 1937ல் ராஜாஜி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் அமல்படுத்தினார். கள்ளுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் சேலம் தாதம்பட்டியில் தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி மதுவிலக்கு அமலுக்கு வர துணை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்