அப்துல் கலாமுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் புகழாரம்

ஆக.02, 2015:- மறைந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் புகழாரம் சூட்டினார்.
இதுதொடர்பாக ஐ.நா. சபையின் இந்தியத் தூதரகப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மறைவு குறித்த இரங்கல் புத்தகத்தில் பான் கி மூன் குறிப்பிட்டதாவது:
அப்துல் கலாம் மறைவையொட்டி, உலகம் முழுவதிலும் இருந்து குவிந்துவரும் இரங்கலானது, இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதும், பின்னர் அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவர் பெற்ற நன்மதிப்புக்கும், பிறருக்கு அளித்த ஊக்கத்துக்கும் நற்சான்றுகளாய் விளங்குகின்றன.
அவரை இழந்து வாடும் இந்திய மக்களின் சோகத்தில், ஐ.நா. சபையும் இணைந்து கொள்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு நாட்டுத் தூதர்களும், அப்துல் கலாம் குறித்த தங்களுடைய கருத்துகளை அந்த இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.