50 மொழிகளுக்கான மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர்!

ஆக.08, 2015:- மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலியை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது.
இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுள் டிரான்ஸ்லேட்டர், 27 மொழிகளுக்கு மட்டுமே உதவக்கூடியது.
மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்துக்கும் கிடைக்கிறது. போன், டேப்லட், ஆப்பில் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றில் இதைப் பயன்படுத்தமுடியும்.
ஒருவர் ஒரு மொழியில் பேசவோ, எழுதவோ (டைப்பிங்) செய்தால், அதை இன்னொரு மொழிக்கு (குறிப்பிட்ட 50 மொழிகளுக்குள்) மாற்றிக்கொள்ளமுடியும். இந்திய மொழிகளில் ஹிந்திக்கு மட்டுமே 50 மொழிகள் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
இந்தப் புதிய செயலியால், கூகுள் இயங்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். கூகுள் பல ஆண்டுகளாக இணையம், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் வழியாக மொழிமாற்றம் தொடர்பான வசதிகளைச் செய்துதருகிறது.