படித்ததில் துடித்தது கொம்பன் கார்த்தி எந்த ஜாதி? : கொலையில் முடிந்த வக்கீல்கள் தகராறு

கொம்பன் கார்த்தி எந்த ஜாதி? : கொலையில் முடிந்த வக்கீல்கள் தகராறு

பதிவர்: நிர்வாகி, வகை: படித்ததில் துடித்தது  
படம்

ஆக.08, 2015:- கொம்பன் படத்தில் ஹீரோ கார்த்திக் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திலே சக வழக்கறிஞரை படுகொலை செய்த வழக்கறிஞர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபரின் பெயர் ராம்நாத் என்பதாகும். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ராம்நாத், மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். இதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பொன்முத்துராமலிங்கம் என்பவருடன் ராம்நாத்துக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கு காரணம் கொம்பன் படம் தொடர்பாக எழுந்த வாக்கு வாதம்தான்.

 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மானாமதுரை வழக்கறிஞர்கள் சுற்றுலாவாக கொடைக்கானல் சென்றனர். வேறு வேறு சமூகத்தை சேர்ந்த ராம்நாத்தும், பொன்.முத்துராமலிங்கமும் வேனில் அருகே அருகே அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது வேனில் கொம்பன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

கொம்பன் படத்தில் கார்த்தி நடித்த கதாபாத்திரம் தங்களின் சமூகத்தை குறிப்பிடுகிறது என்று ராம்நாத் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பொன்முத்துராமலிங்கம் தான் சார்ந்த சமூகம் தான் என்று கூறியுள்ளார். இதனால் வேனிலே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதன் பின் கொடைக்கானல் சென்று அங்கும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் பொன்முத்துராமலிங்கத்தை ராம்நாத் அடித்துள்ளதாக தெரிகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டிருந்த பொன்.முத்துராமலிங்கம் ராம்நாத்தை பழிவாங்க திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை வழக்கறிஞர்கள் குற்றாலம் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

அதில் பொன்முத்துராலிங்கமும், ராம்நாத்தும் கலந்து கொள்ள இருந்தனர். இதற்காக அனைத்து வழக்கறிஞர்களும் மானாமதுரை குற்றவியல் நீதிமன்ற வளாகம் வந்து அங்கிருந்து மொத்தமாக செல்ல திட்டமிட்டனர். இதன்படி வெள்ளிக்கிழமையன்று இரவு வக்கீல் ராம்நாத் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அப்போது அங்கு முத்துராமலிங்கமும் வந்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கம், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்நாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராம்நாத் அலறித் துடித்தார்.

உடனே சக வழக்கறிஞர்கள் ராமநாத்தை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராம்நாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனிடையே பொன்.முத்துராமலிங்கம் நேராக மானாமதுரை டி.எஸ்.பி அலுவலகம் சென்று சரணடைந்தார்.

மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ராம்நாத்துக்கு மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கொலைக்கு பழிவாங்குவோம் என பாதிக்கப்பட்டவர்கள் கூறிவருகின்றனர். சினிமாவினால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் மானாமதுரை வழக்கறிஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்