நாட்டின் முதலாவது ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைக்கு கலாம் பெயர்

ஆக.09, 2015:- ஒலியை விட 7 மடங்கு வேகமாக பாய்கிற ஆற்றல் வாய்ந்த நாட்டின் முதலாவது ஹைபர்சோனிக் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படுகிறது.
கலாம் நினைவாக...
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த மாதம் 27–ந் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார்.
தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானியாகவும், தேர்ந்த கல்வியாளராகவும் திகழ்ந்த கலாமின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு மாநிலங்கள் தங்களது பல்கலைக்கழகங்கள், திட்டங்களுக்கு கலாம் பெயரை சூட்டி வருகின்றன.
அதிநவீன ஏவுகணை
அந்த வகையில், கலாமுக்கு அவர் சார்ந்த ஏவுகணை துறையும் கவுரவம் சேர்க்கிறது.
இந்திய, ரஷிய கூட்டு அமைப்பான பிரம்மோஸ் விண்வெளி நிறுவனம், ஒலியை விட 7 மடங்கு வேகமாக பாய்கிற (மணிக்கு 8,575 கி.மீ. வேகம்) அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை ஒன்றை உருவாக்குகிறது. இந்த ஏவுகணைக்கு கலாம் பெயர் சூட்டப்படுகிறது. அதாவது, பிரம்மோஸ்–2(கே) என பெயரிடப்படுகிறது. இந்த ‘கே’ என்பது கலாமை குறிக்கிறது.
பதுங்கு குழிகள், ஆயுதக்கிடங்குகள்
இந்த ஏவுகணையானது, பதுங்கு குழிகள், ஆயுதக்கிடங்குகளையெல்லாம் குறிவைத்து தாக்கி அழிக்கிற ஆற்றல் வாய்ந்ததாகும்.
இதுபற்றி பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிர் மிஷ்ரா கூறும்போது, ‘‘ஹைபர்சோனிக் ஆயுதங்கள் என்ற புதிய சகாப்தத்தின் நுழைவாயிலில் நாங்கள் இன்றைக்கு நின்று கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் கலாம்தான். அதனால்தான் பிரம்மோஸ்–2 ஏவுகணைக்கு அவரது பெயரை சூட்டுகிறோம்’’ என்றார்.
இந்த பிரம்மோஸ்–2 ஏவுகணை ஒலியை விட 7 மடங்கு வேகமாக பாய்வதால் அது ‘மேக்–7’ என அழைக்கப்படுகிறது.
மரணம் அடைவதற்கு 6 வாரங்கள் முன்பாக கலாம், ஹைபர்சோனிக் ஆயுத தொழில் நுட்பத்தை முடுக்கி விட வேண்டும், 5 ஆண்டுகளுக்குள் இந்தியா செயல்பாட்டு ஏவுகணையை களம் இறக்க உதவ வேண்டும் என்று பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தை கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.