அப்துல் கலாமுக்கு ஐதராபாத் ஆய்வு மைய வளாகத்தில் சிலை திறப்பு

ஆக.11, 2015:- மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இமாரத் ஆய்வு மைய (ஆர்.சி.ஐ.) வளாகத்தில் இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. கலாம் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலையை பாதுகாப்பு மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சதீஷ் ரெட்டி அப்துல் கலாமுடன் உரையாடிய தருணங்கள் மற்றும் அவர் தொடர்பான நினைவுகள் பகிர்ந்துகொண்டார். மேலும், இந்த இமாரத் ஆய்வு மையத்தை நிறுவிய அப்துல் கலாம், ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை உருவாக்கியதாகவும், இந்தியாவை ஏவுகணை சக்தி மிகுந்த நாடாக வளர்ச்சியடையச் செய்ததாகவும் புகழாரம் சூட்டினார்.
கலாமின் கனவுகளுக்கு என்றும் முடிவு இல்லை என்று கூறிய சதீஷ் ரெட்டி, கலாமின் கனவுகளை நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் குறிப்பிட்டார்.
ஆர்.என்.அகர்வால், பிரகலாதா, எஸ்.கே.சல்வான் உள்ளிட்ட முன்னணி விஞ்ஞானிகள், கலாமுடன் பணியாற்றிய அவரது நெருங்கிய உதவியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் (ஏவுகணை) சதீஷ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.