தமிழ்நாடு சாத்தானின் குழந்தை என்று சபிக்கப்பட்ட சிறுவனுக்கு மறு வாழ்வளித்த தமிழக மருத்துவர்

சாத்தானின் குழந்தை என்று சபிக்கப்பட்ட சிறுவனுக்கு மறு வாழ்வளித்த தமிழக மருத்துவர்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஆக.11, 2015:- பிறக்கும்போதே சாதாரண குழந்தைகளின் கைகளை விட இரு மடங்கு பெரிய கைகளுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் கலீம். இந்த இரு கைகளால் அவன் வாழ்வில் அடைந்த துயரங்களை நிச்சயம் வார்த்தையால் விவரிக்க முடியாது.

மூட நம்பிக்கை முத்திப் போன அந்த கிராம மக்கள், சாத்தானின் வடிவமாகவும், சபிக்கப்பட்ட சிறுவனாகவும் நினைத்து அவனை திட்டித்தீர்த்தனர். மூட நம்பிக்கைகளை அகற்றி பகுத்தறிவைப் புகட்ட வேண்டிய கிராமத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர் கூட அவனை பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டார். அன்றாடத் துயரங்களோடு சேர்ந்து அவனது ராட்சத கையும் வளர்ந்த படியே இருந்தது. அவன் 8 வயதை அடைந்த போது, ஒவ்வொரு கையும் தலா எட்டு கிலோ எடையுடன் காணப்பட்டது. அவனின் உள்ளங்கை அடியிலிருந்து கை விரலின் முனை 13 அங்குல தூரத்தில் இருந்தது.

இதனால் சாப்பிடுவது, ஆடைகளை அணிந்து கொள்வது  போன்ற சாதாரண செயல்களைச் செய்யக்கூட பெற்றோரின் உதவியையே அவன் நாட வேண்டியிருந்தது. ஆனால், இவனது தந்தை ஷமீமோ (45) கூலித் தொழிலாளியாக பணியாற்றுபவர். தனது மகனை குணப்படுத்தும் அளவுக்கு தன்னால் சம்பாதிக்க முடியவில்லையே என்று அனுதினமும் கண்கலங்குபவர்.

இந்நிலையில் மருத்துவர்களால் ‘மாக்ரோடாட்டிலி’ என்று அழைக்கப்படும் கலீமை பாதித்த நோயின் விவரமும், அவனது பெற்றோரின் கையறு நிலையும், கடந்த வருடம் பல சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இதையடுத்து, கோவையில் உள்ள புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ராஜ சபாபதி கலீமுக்கு உதவ முன் வந்தார்.  ‘முதல் முறையாக, கலீமை குணப்படுத்த முடியும் என்று கூறியது. இவர் ஒருவர் மட்டும்தான்.’ என்கிறார் கலீமின் தாயார் ஹலீமா.

கலீமை முழுமையாக பரிசோதித்த மருத்துவர் சபாபதி, அவனது நரம்புகளுக்கு சிறிய அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். மேலும், இந்த அறுவை சிகிச்சை அவனது உடல் செயல்பாடுகளை முடக்கி விடக்கூடாது என்பதற்காக முதற்கட்டமாக அவனது ஒரு கையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சையை செய்ய நினைத்தார்.

அதன்படி, சபாபதி தலைமையிலான மருத்துவர்கள் குழுவால், கோவை கங்கா மருத்துவமனையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், கலீமின் வலது கை கிட்டத்தட்ட இயல்பு நிலையின் தோற்றத்திற்கு திரும்பியுள்ளது. கலீம் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது பிசியோ தெரபி சிகிச்சை பெற்று வருகிறான். அவனது இடது கையிலும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களும் கலீமின் பெற்றோரும் தயாராகி வருகின்றனர்.

இந்த சந்தோஷமான தருணத்தில், மாணவர்கள் சலீமிடம் மோசமாக நடந்து கொள்வார்கள் என்ற பயத்தில்தான் பள்ளியில் அவனை சேர்த்துக் கொள்ளவில்லை. தற்போது அவன் சிகிச்சை முடிந்து குணமாகி வருவதால் விரைவில் அவனை சேர்த்துக் கொள்வோம் என்று கலீமின் கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

ஆனால், கிராம மக்கள் மட்டும், சலீம் ஒரு குணப்படுத்த முடியாத சாத்தான் என்றும் அவனது கை மீண்டும் வளரும் என்றும் நம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு அதி நவீன அறுவை சிகிச்சையால் கூட, மூட நம்பிக்கையை ஒழித்து விட முடியுமா என்ன?............

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்