விண்வெளியில் விளையவைத்து அறுவடை செய்யப்பட்ட கீரை!

ஆக.11, 2015:- விண்வெளியில் விவசாயம் செய்து, அறுவடை செய்வதும் சாத்தியம்தான் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்.
பூமிக்கு மேற்பரப்பில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அங்கு விளையவைக்கப்பட்ட ஒருவகைக் கீரையை விண்வெளி வீரர்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் ருசி பார்த்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள 6 விண்வெளி வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை விண்கலம் மூலம் நாசா அவ்வப்போது அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட தொலைதூர கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும்போது, அவர்களுக்கு இதுபோல விண்கலத்தில் உணவு அனுப்புவது மிகச் சிரமமான பணி என்பதால், விண்வெளியிலேயே உணவு உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் நாசா கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த கீரை விவசாயம். "வெஜ் 01' எனப் பெயரிடப்பட்ட இத்திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
நாசாவும், ஆர்பிட்டல் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தின்படி, விதையை நட்டு, வளர்ப்பதற்காக தலையணை போன்ற பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அது விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உற்பத்தி செய்யப்படவுள்ள சிவப்பு நிற கீரைக்கான விதைகள் 15 மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே வைக்கப்பட்டன.
அதன்பிறகு, கடந்த ஜூலை 8ஆம் தேதி இந்த விதைகள் அந்தப் பிரத்யேக தோட்ட அமைப்பில் விதைக்கப்பட்டன (ஒட்டவைக்கப்பட்டன). அதில் இலைகள் முளைத்து, கடந்த 33 நாள்கள் அச்செடி வளர்க்கப்பட்டது.
அந்த விண்வெளித் தோட்ட அமைப்பில், செடியின் வளர்ச்சிக்காக "சிரிஞ்ச்' மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டது. தவிர, செடிகளின் வளர்ச்சிக்கு குறைந்தபட்சத் தேவையான ஊதா, சிவப்பு நிற ஒளி அலைகளுக்காக எல்இடி விளக்குகளும், அதன் வளர்ச்சியை விண்வெளி வீரர்கள் கண்காணிப்பதற்காக பச்சை நிற எல்இடி விளக்கும் பயன்படுத்தப்பட்டது.
33 நாள்களுக்குப் பிறகு, திங்கள்கிழமை இரவு அந்தக் கீரை அறுவடை செய்யப்பட்டது. பூமிக்கு வெளியே விளையவைக்கப்பட்ட முதல் கீரையை பச்சையாக விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி முதல் ஆளாக ருசி பார்த்தார்.
"ஆகா, அற்புதமாக' இருக்கிறது எனக் கூறிய அவர், அச்செய்தியை சுட்டுரை மூலம் நாசாவுக்கு அனுப்பிவைத்தார். அவரைத் தொடர்ந்து, அக்கீரையில் ஆலிவ் எண்ணெய், வினிகர் சேர்த்து மற்ற வீரர்கள் ருசி பார்த்தனர்.
முன்னதாக, அக்கீரையை சாப்பிடும் முன்னர், சிட்ரிக் அமிலம் சார்ந்த ஒரு வகை சுத்தம் செய்யும் கரைசல் மூலம் சுத்தம்
செய்தனர்.
புதிய மைல்கல்...
சர்வதேச விண்வெளி வீரர்களுக்கு புத்தம் புதிய உணவுப் பொருள்கள் கிடைப்பதில்லை. விண்கலம் மூலம் அனுப்பப்படும் ஆப்பிள், கேரட் போன்றவற்றைதான் அவர்கள் உள்கொள்ள வேண்டும். இப்போது விண்வெளியிலேயே கீரை போன்ற உணவு வகைகள் விளைவிக்கப்படும்போது, அவர்களுக்கு புத்தம்புதிய உணவு வகைகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் உணவு வகைகளை உற்பத்தி செய்வது, உணவுத் தேவைக்காக மட்டுமன்றி, விண்வெளி வீரர்களுக்கு மனரீதியாகவும் உற்சாகம் அளிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்கால, செவ்வாய் கிரகப் பயணத் திட்டத்துக்கு இந்த விண்வெளி உணவு உற்பத்தி மிகப் பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.