இந்தியா பூரண மதுவிலக்கு : கேரளாவில் அக்.2ந் தேதி முதல் 26 அரசு மதுக்கடைகளுக்கு பூட்டு

பூரண மதுவிலக்கு : கேரளாவில் அக்.2ந் தேதி முதல் 26 அரசு மதுக்கடைகளுக்கு பூட்டு

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

செப் 30,2015:-  கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த வருடம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தார். இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் 2, 3 மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களில் இயங்கிவந்த மதுபார்கள் அனைத்தும் மூடப்பட்டன.   இந்த பார்களில் தற்போது பீர் மற்றும் ஒயின் வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது கேரளாவில் 26 ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பார்கள் உள்ளன. இது தவிர வருடந்தோறும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் 10 சதவீதம் அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவில் 380க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் இருந்தன. இவற்றில் கடந்த வருடம் (2014) அக்டோபர் 2ம் தேதி 52 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இவ்வருடம் மேலும் 10 சதவீத மதுக்கடைகளை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கேரள கலால்துறை அமைச்சர் கே.பாபு கூறியது: கேரள அரசு எடுத்த கொள்கை முடிவின்படி வருடந்தோறும் அக்டோபர் 2ம் தேதி முதல் 10 சதவீத அரசு மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த வருடம் மொத்தம் 52 மதுக்கடைகள் மூடப்பட்டன. இவ்வருடம் அக்டோபர் 2ம் தேதி முதல் மேலும் 26 மதுக்கடைகள் மூடப்படும்.  இக்கடைகள் அக்டோபர் 1ம் தேதி (நாளை) வரை மட்டுமே இயங்கும். கடந்த வருடம் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 17 மதுக்கடைகள் மூடப்பட்டன.  இன்னும் சில மதுக்கடைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இவை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்படும். அரசின் நடவடிக்கைகளால் கேரளாவில் மது விற்பனை கடந்த வருடத்தை விட இவ்வருடம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்