அமெரிக்காவுடன் போருக்கு தயார்: வடகொரியா

அக் 11,2015:- ''அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தயாராக இருக்கிறோம்'' என வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் அறிவித்தார். வடகொரியா நாட்டில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த 70வது ஆண்டு விழாவில் பேசும்போது கிம் ஜாங் இவ்வாறு அறிவித்தார்.விழாவில் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டு அவர் பேசும்போது,
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் எந்தவிதமான போரையும் எதிர்கொள்ள எங்களது புரட்சிகர ராணுவம் தயாராக இருக்கிறது. நமது ராணுவம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்போம்'' என்றார்.
இந்த விழாவில் முன் எப்போதையும் விட ஆக்ரோஷமாக கிம் ஜாங் பேசியுள்ளார். அப்போது வடகொரியா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், உயர் ராணுவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஏற்கனவே அருகில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடான தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து பதட்டம் இருந்து வரும் நிலையில், கிம் ஜாங்கின் இந்த பேச்சு, பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.