சிரியா போர்க் களத்தில் அமெரிக்கா-ரஷியா மறைமுக யுத்தம்

அக் 11,2015:- காஸ்பியன் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரஷியாவின் 4 போர்க் கப்பல்களிலிருந்து சீறிக் கிளம்பும் ஏவுகணைகள் சுமார் 1500 கி.மீ. தொலைவு - இராக், ஈரான் நாடுகளின் வான் பரப்பைக் கடந்து சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இலக்குகளைத் தாக்குகின்றன; சிரியாவின் லடாக்கியா பகுதியிலிருந்து பாயும் ரஷிய போர் விமானங்கள் சிரியா அரசுப் படைகள் தரைவழியாக முன்னேறிச் செல்வதற்கு உதவும் வகையில் குண்டுகளை வீசுகின்றன.
சிரியாவில் நடந்துவரும் போரில் ரஷியா திடீரென இணைந்துகொண்டு காட்டும் ஆக்ரோஷம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைகளை மட்டுமன்றி, உலக நாடுகளையும் திகைக்க வைத்துள்ளது. அதேவேளையில், 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் இத்தகைய தாக்குதலை நடத்தி, அது ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக பெரிய பலனை அளிக்காத நிலையில், ரஷியாவும் அதேபோன்ற விமானத் தாக்குதலை நடத்துவது எந்த அளவுக்கு பலன் தரக்கூடும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
ரஷியா தலையீடு ஏன்?
சிரியாவில் 2011ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகள் ஒருபுறம், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஒருபுறம் என நாடு முழுவதும் நடந்த தாக்குதல்களில் இதுவரை 2.50 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டுமுதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைள் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான விமானத் தாக்குதலைத் தொடங்கின. அதே வேளையில், அதிபர் அசாதை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதனால் அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட கிளர்ச்சிப் படைகள், ஒரே நேரத்தில் ஐ.எஸ்.க்கு எதிராகவும், அரசுப் படைக்கு எதிராகவும் சண்டையில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில்தான் ரஷியாவின் தலையீடு.
ஐ.எஸ்.ஸுக்கு எதிரான ராணுவத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசின் முறைப்படியான வேண்டுகோளை ஏற்று விமானத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ரஷிய அதிபர் புதின் கூறினாலும், இதற்கான திட்டம் சுமார் 4 மாதங்களுக்கு முன்னரே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் மேஜர் ஜெனரல் குவாசம் சுலைமானி கடந்த ஜூலை மாதம் ரஷியாவுக்குச் சென்றபோதே இத்தாக்குதல் திட்டம் உருப்பெற்றது.
ரஷியாவைப் போல ஈரானும் சிரியாவின் முக்கியமான ஆதரவு நாடு. ஷியா பிரிவினரை பெரும்பான்மையினராகக் கொண்ட ஈரான், சன்னி பிரிவு ஆதரவு இயக்கமான ஐ.எஸ்.ஸை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. அந்த வகையில்தான் சிரியாவில் ஐ.எஸ்.ஸை ஒழிக்கும் புதிய தாக்குதல் கூட்டணியில் ஈரானும் இணைந்துள்ளது. சிரியாவின் அதிபர் அசாத் தலைமையிலான அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது என, ஈரான்-ரஷியா இடையே ஓர் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சிரியாவின் அரசுப் படைகள், ஈரானின் தரைப்படை, லெபனானின் ஹிஸ்புல்லா படை ஆகியவை நடத்தும் தரைவழித் தாக்குதலுக்கு ஆதரவாக, ரஷியா வான்வழித் தாக்குதலை நடத்தும்; ரஷியாவின் அதிநவீன ஆயுதங்கள் சிரியா ராணுவத்துக்கு வழங்கப்படும்.
மறைமுகப் போர்?
ரஷியாவின் விமானத் தாக்குதல் "எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல்' என அமெரிக்கா சீறியுள்ளது. ரஷியாவின் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனி, பிரிட்டன், கத்தார், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் கூறியுள்ளன. ஐ.எஸ்.ûஸ குறிவைப்பதாக ரஷியா கூறினாலும், அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட, சிரியா அரசுக்கு எதிரான படைகளையே ரஷியா அதிகம் தாக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால், ரஷியாவின் தாக்குதலில் இருந்து தான் பயிற்சியளித்த படையினரைக் காக்க வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவும் ரஷியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மறைமுகப் போராக (அதிபர் ஒபாமா மறுத்தாலும்கூட) இது கருதப்படுகிறது.
பின்னணியில் கடற்படைத் தளம்
சிரியா கடந்த 40 ஆண்டுகளாக ரஷியாவின் நம்பகமான கூட்டாளியாகத் திகழ்ந்து வருகிறது. எத்தனையோ முறை தற்போதைய அதிபர் அசாதுக்கு எதிரான தீர்மானங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துள்ளது. கடந்த கால நட்பின் அடிப்படையில், ரஷியா ஆதரவுக் கரம் நீட்டியதாகக் கூறப்பட்டாலும், இதற்குப் பின்னணியில் சிரியாவில் டார்ட்டஸ் துறைமுகத்தில் ரஷியா அமைத்துள்ள கடற்படைத் தளமும் முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.
1971இல் சிரியாவிடமிருந்து இந்த இடத்தை குத்தகைக்குப் பெற்றது ரஷியா. இதற்கு ஈடாக, சிரியா அதுவரை தன்னிடம் வாங்கி இருந்த பல கோடி டாலர் கடனை ரஷியா தள்ளுபடி செய்தது. மத்திய கிழக்கில் உள்ள ரஷியாவின் ஒரே கடற்படைத் தளம் இதுதான். 1991இல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர், இதை ஓர் அடையாளமாக வைத்துள்ளதாகக் கூறும் ரஷியா, இப்போதும் சில இடங்களுக்கு தங்கள் கப்பல்களை அனுப்பவே இக்கடற்படைத் தளத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது. ஆனால், சிரியா உள்ளிட்ட நாடுகளுடனான பலகோடி டாலர் ஆயுத பேரத்தின்படி, ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு தளமாக இக்கடற்படைத் தளத்தை ரஷியா பயன்படுத்து வருகிறது என்பது மற்றொரு மறைமுகக் காரணம்.
**ரஷிய, சிரிய உறவு பனிப்போர் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.
1947 முதல் 1991 வரை நடைபெற்ற பனிப்போரின்போது, மேற்குலக நாடுகளுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆதரவாக சிரியா செயலாற்றியது.
பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, முந்தைய சோவியத் யூனியன் எல்லையைத் தாண்டி ரஷியா மேற்கொள்ளும் முதல் ராணுவ நடவடிக்கை இது.
**சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியா, ஈரான், லெபனானின் ஹெஸ்புல்லாபடைகளும், எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி, கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன.