தமிழ்நாடு அமைச்சர் யாரையும் தெரியாது; எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

அமைச்சர் யாரையும் தெரியாது; எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

அ.தி.மு.க.,வில், 'எனக்கு அந்த அமைச்சரை தெரியும்; அவர் எனக்கு நெருக்கமானவர்' என, 'பீலா' விட்ட நிர்வாகிகள் எல்லாம், இன்று, 'அமைச்சர் யாரையும் தெரியாது; எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, அலறி அடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில், முதல்வருக்கு அடுத்த இடத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் இருந்தார். அவரது தலைமையில் இயங்கிய ஐவரணியில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தவம் கிடந்தனர்:

இருமுறை முதல்வர் பதவி வகித்த பின், கட்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் செல்வாக்கு அதிகரித்தது. ஐவரணியில் ஒருவரை பிடித்தால், கட்சியில் பதவி பெறலாம் என்ற நிலையும் உருவானது. எனவே, ஐவரணியில் இடம் பெற்ற அமைச்சர்களை காண, கட்சி நிர்வாகிகள் அவர்களின் வீட்டு வாசலில் தவம் கிடந்தனர். அத்துடன், 'ஐவரணி அமைச்சர்கள் எல்லாம், நமக்கு நன்கு அறிமுகம். அவர்களின் உறவினர்கள் நமக்கு நெருக்கமானவர்கள்' என, பீலா விடும் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.இவர்களை சுற்றி, புரோக்கர்களின் நடமாட்டமும் இருந்தது. அரசு டெண்டர்கள் பெற, அவர்களின் உதவியை, கட்சியினர் நாட துவங்கினர். ஐவரணியினரை பிடித்தே, கட்சியில் பெரும்பாலானோர் பதவிகளையும் பெற்றனர்.

இந்நிலையில், ஐவரணியில் இடம் பெற்றிருந்த, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரை, கட்சி தலைமை ஓரம் கட்டியது. மூன்று பேரின் வீடுகளில் சோதனை நடந்ததாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தினமும் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இது, அ.தி.மு.க., மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்த, மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மத்தியில், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாதத்திற்கு முன் வரை, ஈக்கள் மொய்ப்பது போல், கட்சியினர் மொய்த்த ஐவரணியில், இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் வீடுகள் எல்லாம், இன்று வெறிச்சோடி கிடக்கின்றன.

சத்தியம்:

அவர்களை காண தவம் கிடந்தவர்கள் எல்லாம், இன்று, அந்த பக்கம் எட்டிப் பார்க்கக் கூட தயங்குகின்றனர்.'ஐவரணியில், எனக்கு அந்த அமைச்சரை தெரியும்; இந்த அமைச்சரை தெரியும்' என, பீலா விட்டவர்கள் எல்லாம், 'யாரையும் தெரியாது; அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, சத்தியம் செய்கின்றனர்.மேலும், ஓரம் கட்டப்பட்ட அமைச்சர்கள், முன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களை வரவேற்க குவிந்தவர்கள், மாலைகளுடன் காத்திருந்தவர்கள், கப்பம் கட்டியவர்கள் எல்லாம், இன்று இருக்கும் இடம்


தெரியவில்லை. கட்சியினர் கேட்டால் கூட, 'அய்யோ... நான் அவர் ஆளில்லை' என்று கூறியபடி ஓட்டம் பிடிக்கின்றனர். எது எப்படியோ, முதல்வரின் அதிரடி நடவடிக்கை, அவரின் மற்றும் அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகள் மத்தியில், உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டாள் கோவிலில் ஓ.பி.எஸ்., மகன்:

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பிரதீப், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்துார், மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின், 7:40 மணிக்கு, ஆண்டாள் கோவில் சென்றார். அவரை வரவேற்க, கட்சியினர் யாரும் வரவில்லை. ஆனால், கோவில் செயல் அலுவலர் ராஜாராம் வரவேற்று, அழைத்து சென்றார்.முதலில், வடபத்ரசயனர் சன்னிதி, பின் ஆண்டாள் சன்னிதி என, இரவு 8:50 மணி வரை, தரிசனம் செய்தார்.

இரவில் அங்கு தங்கிய அவர், நேற்று காலை செண்பகதோப்பில் உள்ள, குலதெய்வமான பேச்சியம்மன் கோவில் சென்று, தரிசனம் செய்தார். பிரச்னையிலிருந்து விடுபட, பங்குனி மாதத்தில் குல தெய்வத்தை வணங்கினால் நன்மை தரும் என்பதால், அவர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக, பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தால், போட்டி போட்டு வரவேற்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்