இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசமாட்டார் விஜயகாந்த்!

ஆம்... இதுதான் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தலைவர்கள் இணைந்து எடுத்திருக்கும் முடிவு என நம்பகமான செய்திகள் வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம். குறிப்பாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் போய் சிகிச்சைப் பெற்று வந்தபிறகு இந்த இரு ஆண்டுகளில் ரொம்பவே மோசம்.
தன்னிலை மறந்து அவர் காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதேதோ பேசுகிறார். அந்தப் பேச்சிலும் தெளிவில்லை. தன்னால் சிரிக்கிறார்... அல்லது கண்ணீர் வடிக்கிறார். நடையில் பெரும் தள்ளாட்டம். அவரைக் குறை சொல்வதற்காக இப்படி எழுதவில்லை. இருக்கும் நிஜத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா?
விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தபோதே, திமுகவுக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்கள் சிலர், 'இவரைக் கூட்டணிக்கு அழைப்பது நமக்குத்தான் பாதகமாக முடியும். இவரை வைத்துக் கொண்டு எப்படி பிரச்சாரம் செய்வது? மேடைகளில் இவர் செய்யும் கோமாளித்தனங்களை நாமல்லவா சமாளிக்க வேண்டி இருக்கும். விழுகிற கூடுதல் ஓட்டுக்களைப் பிரிக்க அது போதாதா?' என்று கேட்டு வந்தனர்.
விஜயகாந்திடம் மக்கள் நலக் கூட்டணி பேச ஆரம்பித்ததுமே, அந்த அணியில் உள்ள நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் இதைத்தான் சுட்டிக் காட்டினர்.
ஆனால் கடைசியில் மநகூ - தேமுதிக தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.
அத்துடன் வெளியில் தெரியாத தேர்தல் பிரச்சார உடன்பாடு ஒன்றையும் போட்டுள்ளதாம் இந்த கூட்டணி.
இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பேசமாட்டார்.. அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு முடித்துக் கொள்வார். மற்ற அனைத்தையும் அவர் மனைவி பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் பார்த்துக் கொள்வார்கள்.
வைகோ, திருமா, ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரச்சாரத்துக்குப் போகும்போது, அங்கேயும் வாக்காளர் பெயரைக் கூறி (அதிலும் பெரும் பிரச்சினை இருக்கே!) விஜயகாந்த் வாக்குக் கேட்பதோடு சரி. மீதி எல்லாவற்றையும் இந்தத் தலைவர்களே பார்த்துக் கொள்வார்களாம்.
அதாவது விஜயகாந்தை அழைத்துப்போய் ஊர் ஊராகக் காட்டுவதுதான் இந்தக் கூட்டணியின் புதிய உத்தி!
இதற்கு வெள்ளோட்டமாக இப்போதே முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை தன்னந்தனியாக ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா.
ஒருவேளை கூட்டணி ஜெயித்துவிட்டால், ஆட்சி முறையும் இப்படித்தான் இருக்குமோ!