தமிழ்நாடு வரும் 5ல் ரயில் மறியல் போராட்டம்: அனைத்து விவசாய சங்க கூட்டியக்கம்

வரும் 5ல் ரயில் மறியல் போராட்டம்: அனைத்து விவசாய சங்க கூட்டியக்கம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

''தமிழகத்தில், வரும், 5ம் தேதி நடக்கும் ரயில் மறியல் போராட்டத்தில், அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்,'' என, 96 விவசாய சங்க கூட்டியக்க செயலர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

தமிழகத்தில், 2014 முதல், 2016ம் ஆண்டு வரை, 2,453 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த, மார்ச்சில், மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளின் நெருக்கடிகளே காரணம்.

இயற்கை சீற்றம், வறட்சி, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை, ஆள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால், வாங்கிய கடனை, விவசாயிகளால், தவணை காலங்களில் செலுத்த முடியவில்லை.

விவசாயிகள் அடகு வைத்த நகையை ஏலம் விடுதல், குண்டர்களை வைத்து மிரட்டி கடன் வசூல் செய்தல் போன்ற வங்கிகளின் அத்துமீறல் நடவடிக்கைளால், மன உளைச்சலுக்கு ஆளாகும் விவசாயிகள், தற்கொலை செய்வதை தவிர, வேறு வழியில்லாத நிலை உருவாகிவிட்டன. கடந்த ஐந்தாண்டில், 4,500க்கும் அதிகமான டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளை கைவிட பலமுறை கோரியும், கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வரும், 5ம் தேதி, மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

எங்கள் போராட்டத்துக்கு, அ.தி.மு.க.,- பா.ஜ., தவிர்த்து, அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்து, போராட்ட களத்தில் துணை நிற்க, உறுதியளித்துள்ளது. விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்