இந்தியா "பாரத் மாதா கி ஜே" சொல்லாதவர்கள் இந்தியாவில் தங்க உரிமை இல்லை!

"பாரத் மாதா கி ஜே" சொல்லாதவர்கள் இந்தியாவில் தங்க உரிமை இல்லை!

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

தேசியவாதம் குறித்து நாடு முழவதும் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாதவர்களுக்கு இந்நாட்டில் தங்க உரிமை கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.  நாசிக்கில் மகாராஷ்டிரா மாநில பாஜ கட்சியின் மூன்று நாள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்வது பற்றி இன்னும்கூட ஒரு சர்ச்சை உள்ளது. அதை சொல்வதை எதிர்ப்பவர்களுக்கு நாட்டில் தங்கியிருக்க எந்த உரிமையும் கிடையாது. இங்கு வசிப்பவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்ப வேண்டும்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்புவோரை ஆதரித்து வருவது கண்டிக்கத்தக்கது. திர்க்கட்சியினர் பாஜ.வுக்கு எதிராகத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர ‘பாரத் மாதா’ கோஷத்தை எதிர்த்து அல்ல. இந்து கலாச்சாரத்தின்படி எந்தவொரு கோயிலுக்குள்ளும் பெண்கள் நுழைய பாலின பாகுபாடு அல்லது ஜாதி பாகுபாடு கிடையாது. இந்த பிரச்னை சம்பந்தமாக மாநில அரசு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தனது நிலையை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. வரும் காலங்களில் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது.

விதர்பா மற்றும் மராத்வாடா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக சில தலைவர்கள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர். ஊழல் மற்றும் ஊழல் மனப்பான்மைக்கு எதிராக எனது அரசு போராடி வருகிறது. மாநிலத்தின் பொக்கிஷத்தை சூறையாடிய யாரையும் இந்த அரசு விட்டு வைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் ‘பாரத் மாதா கி ஜே’ சொல்லாதவர்களுக்கு நாட்டில் தங்க உரிமை இல்லை என்று முதல்வர் பட்நவிஸ் கூறியிருப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி கூறினார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், “இந்த நாட்டில் யார் வசிக்க வேண்டும், யார் வசிக்கக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.

சிலவற்றை நீங்கள் மக்களிடம் திணித்தால் அது துவேஷத்தையே ஏற்படுத்தும். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இதுபோல பேசக்கூடாது” என்றார்.‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்ப தடை விதித்து தருல் உலூம் என்ற முன்னணி இஸ்லாமிய கல்வி நிறுவனம் ‘பத்வா’ பிறப்பித்ததற்கு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்