தமிழ் செய்திகள் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் : தனிநாயகம் அடிகள்

தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் : தனிநாயகம் அடிகள்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் தனிநாயகம் அடிகள் என திருச்சி தனிநாயகம் அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநர் அமுதன் அடிகள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் பாரத தமிழ் மன்றம், உலகத் திருக்குறள் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனிநாயக அடிகள் நூற்றாண்டு விழாவில், "தனிநாயக அடிகள் உலகளாவிய தொண்டு' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

1913 ஆம் ஆண்டு பிறந்த தனிநாயகம் அடிகள் ஆங்கிலம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், போர்ச்சுகீசியம், கிரேக்கம், ஹீப்ரு, சிங்களம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

பல்வேறு மொழிகளைக் கற்று இந்தியாவுக்கு வந்த அவர் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தில் புனித திரேசா மடத்தின் பாட சாலையில் நான்காண்டுகள் துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். அங்குதான் அவருக்கு முறையாகத் தமிழைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதையடுத்து, அதே பள்ளியில் பணியாற்றிய பண்டிதர் குருசாமி சுப்பிரமணியனிடம் தமிழ்ப் பயிலத் தொடங்கினார்.

பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார்.

"சேவியர் தணிஸ்லாஸ்' என்றழைக்கப்பட்ட அவர், தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தன் பெயரை "தனிநாயகம்' என மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு அவர் தமிழ் மீது பற்றுள்ளவராக மாறினார்.

ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, ஈக்குவடார், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமிழின் பெருமை குறித்து அவர் சொற்பொழிவாற்றும்போது அந்நாட்டு மொழிகளிலேயே பேசுவார். இந்த அரும்பணியை வேறு யாரும் செய்ததில்லை.

உலக அளவிலான தமிழ் அமைப்பை அமைக்க விரும்பிய அவர் 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் மூலம் உலக அளவில் தமிழின் பெருமை பரவியுள்ளது.

தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் தமிழுக்கு உள்ள பெருமையை வெளியுலகுக்கு எடுத்துக் கூறினார்.

தமிழில் வீரமாமுனிவர்தான் முதல் முதலில் அச்சிட்டார் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், அவருக்கு முன்பே ஹென்ரிக்கே என்ற பாதிரியார் 1578 ஆம் ஆண்டில் "தம்பிரான் வணக்கம்' என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார் என்ற தகவலை தனிநாயகம் அடிகள்தான் எடுத்துரைத்தார்.

தனிநாயகம் அடிகளார் எழுதிய கட்டுரைகள் மூன்று நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில், ஆங்கிலத்தில் இரண்டும், தமிழில் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஆங்கிலத்தில் 1,600 பக்கங்களுக்கும், தமிழில் 400 பக்கங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அமுதன் அடிகள்.

விழாவுக்கு தமிழகப் புலவர் குழுத் தலைவர் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்.

இதில் பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், உலகத் திருக்குறள் பேரவையின் தஞ்சாவூர் செயலர் பழ. மாறவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்