மைசூர் ராஜ குடும்பம் பற்றி பாதுகாக்கப்படும் சில ரகசியங்கள்!!

மே.29, 2015:- மைசூரின் 27வது மன்னராக யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார்(23) பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மைசூர் ராஜ குடும்பம் பற்றி பாதுகாக்கப்படும் சில ரகசியங்கள் வெளியே வந்துள்ளது. மைசூரின் மன்னராக யாதுவீர் கிருஷ்ணதத்தா சம்ராஜ வாடியார் முடிசூடியுள்ளார். குடும்ப கௌரவத்தை காப்பது, பெருமை தேடிக் கொடுப்பது உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகள் அவருக்கு உள்ளது. மன்னரின் பொறுப்புகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் மைசூர் ராஜ குடும்பம் பற்றிய சில ரகசியங்கள் தெரிய வந்துள்ளது.
இந்தி பேராசிரியர்
வாடியார் குடும்பத்தின் நெருங்கிய உறவினரும், இந்தி பேராசிரியருமான நஞ்சராஜா அர்ஸ்(70) என்பவர் ராஜ குடும்பத்தின் இந்தி வாத்தியார். அவர் ராஜ தம்பதிக்கு இந்தி கற்றுக் கொடுத்ததுடன் அவர்களுக்கு திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். அவர் மட்டும் தான் ராஜாவை பெயர் சொல்லி அழைப்பார். மற்றவர்கள் மஹாஸ்வாமி அல்லது புத்தி என்று அழைக்க வேண்டும்.
மகாராஜா
மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் திருமணம் நடக்க முக்கிய காரணம் நஞ்சராஜா அர்ஸ். மைசூரைச் சேர்ந்த பிரமோதா தேவி தனது உறவினரான ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஸ்ரீகாந்த தத்தாவை மணக்க தயங்கினார். ஆனால் தத்தாவுக்கோ தேவியை மிகவும் பிடித்திருந்தது. மைசூர் ராஜ குடும்பத்தாருக்கு விடுக்கப்பட்டுள்ள சாபத்தால் வாடியார் குடும்பத்தில் வாரிசு இருக்காது என்று அஞ்சினார் தேவி. அப்போது தான் அர்ஸ் தேவியை சமாதானம் செய்து தத்தாவை திருமணம் செய்ய வைத்தார். பிரமோதா தேவி, தத்தா தம்பதிக்கு குழந்தை இல்லை. தத்தா இறந்த பிறகு தேவி யாதுவீரை தனது மகனாக தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல்
ஸ்ரீகாந்த தத்தா ஹோட்டல் அதிபரின் மைத்துனியை காதலித்தது ஒரு சிலருக்கே தெரியும். அந்த பெண்ணோ தன்னை தத்தாவுக்கு திருமணம் செய்து வைக்குமாறு ராஜ குடும்பத்தாரை மிரட்டியுள்ளார். இந்நிலையில் அர்ஸுக்கு நெருக்கமான ஒருவர் அந்த பெண்ணை அணுகி தத்தா எழுதிய காதல் கடிதங்களை ஒப்படைத்துவிட்டு மைசூரை விட்டு வெளியேறுமாறு கூறினார். அந்த பெண் மைசூரை விட்டு வெளியேறிய பிறகே ஸ்ரீகாந்த தத்தா பிரமோதா தேவியை மணந்தார்.
சாபம்
18வது நூற்றாண்டில் ஸ்ரீரங்கப்பட்டனத்தின் தலைவராக இருந்தவரின் மனைவி அலமேலம்மா மைசூர் மன்னர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று சாபமிட்டார். அலமேலம்மா தனது கணவர் இறந்த பிறகு தன்னிடம் இருந்த விலை உயர்ந்த நகைகளை ஆதிரங்கா கோவில் தெய்வங்களுக்கு சூட்டி அழகு பார்த்தார். வாரத்தில் இரண்டு நாட்கள் அந்த நகைகள் சாமிகளுக்கு போடப்படும். மீதமுள்ள நாட்கள் நகைகள் அலமேலம்மாவிடம் இருக்கும். இந்நிலையில் கோவில் அதிகாரிகள் அந்த நகைகளை தங்கள் பொறுப்பில் விடுமாறு ராஜா வாடியாரிடம் கேட்க அவர் அதை அலமேலம்மாவிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நகைகளை அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ராஜா நகைகளை வாங்கி அல்லது பறித்து வருமாறு ராணுவத்தை ஏவினார். ராணுவத்திடம் இருந்து தப்பிக்க தலைக்காடு பகுதியில் காவிரி ஆற்றில் குதித்தார் அலமேலம்மா. குதிக்கும் முன்பு தான் அவர் ராஜ குடும்பத்தாருக்கு சாபம் விட்டார்
கார்கள்
மகாராஜா ஸ்ரீகாந்த தத்தா வாடியாருக்கு சொகுசு கார்கள் என்றால் பிடிக்கும். அவர் 15 சொகுசு கார்கள் வைத்திருந்தார். அனைத்து கார்களின் எண்களும் தான் பிறந்த வருடமான 1953ஐ குறிக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அவரிடம் 5 பிஎம்டபுள்யூ கார்கள் இருந்தன. அவர் மகாராணியுடன் காரில் நெடுந்தூரம் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.