தமிழ்மொழியின் சிறப்பை அறிந்துகொள்ள சிங்கப்பூரில் புதிய அப்ளிகேஷன் அறிமுகம்

மே.31, 2015:- சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். மலாய், ஆங்கிலம் ஆகியவற்றுடன், தமிழ் மொழியையும் அலுவலக மொழியாக அங்கீகரித்து சிறப்பு செய்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்நிலையில், தமிழர்களின் குழந்தைகள் தமிழ்மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் புதிய அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற 14வது இணையதள மாநாட்டில் இந்த புதிய அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்ளிகேஷனுக்கு ‘அரும்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஆங்கிலம், மலாய் உள்ளிட்ட மொழிகளில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் வகையிலான தொழில்நுட்பம் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கூறுகையில், ‘‘சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ, வீடியோவுடன் கூடியதாக அரும்பு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தமிழின் பெருமையை குழந்தைகள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்’’ என்றார். தமிழ்மொழியை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பூர் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ் பேசும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. மேலும், தமிழ்மொழி குறித்த விழிப்புணர்வு பிரசாரம், கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.