தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக கொண்டு வர சட்டத்திருத்தம் வேண்டும் : பழ.நெடுமாறன்

ஜூலை.11, 2015:- தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
உலகத் தமிழ் கழகம் சார்பில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் வந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு 1956 ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நிறைவேற்றியது. தமிழோடு, ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தை நீக்க வேண்டும்.அதற்குப் பதிலாக தமிழகத்தில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.1965 ஆம் ஆண்டு நடத்த இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் விளைவாக 1976 ஆம் ஆண்டு இந்தி ஆட்சி மொழி சட்டத்திருத்த விதிகள் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களுக்குத் தான் இந்தி ஆட்சிமொழி சட்டம் செல்லும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தி எந்த வகையிலும் தமிழகத்தில் ஆட்சிமொழியாகும் தகுதியை இழந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழில் மட்டுமே செயல்பட வேண்டும். மத்திய அரசு தமிழையும் ஆட்சிமொழியாக்க வேண்டும். இந்த போராட்டத்திற்குப் பிற தமிழ் அமைப்புகளும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கே தமிழகத்தில் நூறு சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகளை தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் கண்டறிந்து வேலை வழங்கிட வேண்டும்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தமிழுக்கு முக்கியத்துவம் தருவதாகக் கூறிவிட்டு ஆங்கிலத்தைப் புகுத்தியது. தமிழகத்தில் ஆங்கில மோகத்தை ஏற்படுத்தியதற்கு இந்த இரு கட்சிகளுமே காரணம் ஆகும்.முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது என கூறி மனு தாக்கல் செய்தது.
தற்போது மத்திய அரசின் உளவுத்துறை விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் எச்சரிக்கையில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என மீண்டும் கூடுதலாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற செயல் தவறானதாகும்.
ஏற்கெனவே விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அச்சுறுத்தல் என கேரள மாநிலம் சொல்லி வரும் நிலையில், அதே வாதத்தை உறுதி செய்யும் எதையும் ஆராயாமல் மனு தாக்கல் செய்வது சரியான முறையல்ல.தமிழக அரசு தமிழர்களுக்கு எதிரான செயலில் ஈடுபடும்போது அதற்கு எதிராக அழுத்தம் தருவதன் மூலமே இதையெல்லாம் சரி செய்ய முடியும்.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தமிழக அரசு விளம்பரம் தேடிக் கொள்ள முற்பட்டதே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்ய நேர்ந்தது. இவ்விஷயத்தை தமிழக அரசு மிகவும் பொறுமையாக கையாண்டு இருப்பின் மூவரும் விடுதலை ஆகியிருக்க முடியும் என்றார்.
பேட்டியின்போது, உலகத் தமிழ் கழகத்தின் தலைவர் ந.அரணமுறுவல், பொருளாளர் வை.ந.ஆடலரசு, மாநாட்டு குழு தலைவர் செ.சி.இளந்திரையன், நெறியாளர்கள் இரா.இளங்குமரனார், ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.