இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியா? தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஜூலை.17, 2015:- இந்தியாவின் தேசிய மொழி இந்தி என எட்டாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2015-16 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 329ல் இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர்.
‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறி உள்ளனர். இது மிகத் தவறான வழிகாட்டுதல் ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழி என்று எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை. இந்தியும், ஆங்கிலமும் அரசு இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. இந்தியாவிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது தமிழ்நாடு மட்டும்தான்.
இந்நிலையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்று இருக்கின்றது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும்.