விவசாயிகள் தற்கொலை : தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஜூலை.19, 2015:- விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை தமிழக அரசு மெத்தனப் போக்குடன் அணுகி வருவதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவல்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழக வேளாண் பிரச்சினை தொடர்பாக, திமுக பொருளாளர் ஸ்டாலினைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வெள்ளை அறிக்கை கோருகிறார் விஜயகாந்த்
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய அளவில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழகத்தை இந்தியாவிலே முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று சொன்ன ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழகம் எல்லா துறைகளிலும், குறிப்பாக விவசாயத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதற்கு அதிக எண்ணிகையிலான விவசாயிகளின் தற்கொலையே சான்றாகும்.
அதிமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விவசாயிகளை காப்பாற்றுவதற்காகவே ஜெயலலிதா அவதாரம் எடுத்திருப்பதைப்போல பேசி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அதோடு நில்லாமல் தங்கள் கட்சியை சார்ந்தவர்களையே அழைத்துவந்து விவசாயிகள் என்ற பெயரில் பாராட்டுவிழா நடத்தி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
ஆனால், யதார்த்த நிலையில் தமிழக விவசாயிகள், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வழிதெரியாமல், அதற்காக வாங்கிய கடனுக்கு பதில் சொல்லமுடியாமலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, அதை நடைமுறைபடுத்த தவறியதாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதோடு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பயிர் கடனையோ, பயிர் காப்பீட்டுத் திட்டத்தையோ அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் ஆக்கபூர்வமாக செயல்படுத்தாத இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதோடு மக்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகளையும், ஏரிகளையும் பொதுப்பணித்துறை மூலம் அரசு கபளீகரம் செய்வது கண்டனத்திற்குரியது. உயிர்கள் அனைத்திற்கும் தண்ணீர்தான் ஜீவாதாரமாகும். ஏரிகளையும், நீர் நிலைகளையும் முறையாக இந்த அரசு பராமரிக்காததால், பொது நீர் நிலைகளிலிருந்து மக்களுக்கு குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு போதுமான நீர் இன்றி தமிழகம் தவியாய் தவிக்கிறது.
நீர் நிலைகளை காப்பாற்றி மக்களை காக்கவேண்டிய இந்த அரசே அவற்றை அழிப்பதில் அசுரவேகம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம். இனிமேலாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலும், விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்றவும் இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து இந்த அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், "வேளாண்மை தொழிலை அடிப்படையாக கொண்ட நமது நாட்டில், விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையில்லாமை, விவசாயிகள் வாங்கும் இடு பொருட்களின் விலை பண்மடங்கு அதிகரிப்பு, எளிதில் கடன் பெற முடியாத காரணத்தால் அதிக வட்டிக்கு கடன் பெற்று, திருப்பி செலுத்திட இயலாமை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தன் மானத்தோடு வாழ இயலாத நிலையில் விவசாயிகள் தற்கொலை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 5650 விவசாயிகள் தற்கொலை கொண்டதாகவும் அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 68 விவசாயிகள் மற்றும் 827 விவசாயத் தொழிலாளர்கள் என்றும் மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு அரசு இத்தகைய தற்கொலைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையே தொடர்கின்றது. இவ்வாண்டு திருவாரூர் மாவட்டத்தில், இரண்டு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துக் கூறப்பட்டபோது ஏற்கவில்லை.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகமே தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டில் 68 விவசாயிகள் மற்றும் 827 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதை வெளிப்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும். உற்பத்தி பொருள்களுக்கான விலையை வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்திட முன்வரவேண்டும். விவசாயிகளின் தெற்கொலையை ஏற்றுக் கொண்டால், தங்களின் ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கம் எனக் கருதி அவைகளை மூடி மறைக்கும் செயலை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக்கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களை கண்டறிந்தும், அதனைப்போன்று 2015-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்" என்று முத்தரசன் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
முன்னதாக , கடலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "கடந்த 4 ஆண்டில் விவசாயிகள், நெசவாளிகள், அரசு அதிகாரிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இவை அனைத்துக்கும் தமிழக அதிமுக அமைச்சர்களிடம் நீதி கேளுங்கள்" என்றது கவனிக்கத்தக்கது.