தமிழக வளர்ச்சிக்கான கனவுப் புத்தகத்தை எழுதி முடிக்கும் தருவாயில் மறைந்த அப்துல்கலாம்

ஜூலை.27, 2015:- முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர்.ஆ.ப.ஜே.அப்துல்கலாம் நேற்று மாலை உயிரிழந்தார். அன்னாரது மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஏற்கனவே, இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடனும், திட்டங்களுடனும் அப்துல்கலாம் அவர்கள் இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதேபோல், தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு 'எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்' என்ற புத்தகத்தை எழுதி வந்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவரது அறிவியல் ஆலோசகராக இருந்தவரும், இந்த புத்தகத்தின் இணையாசிரியருமான வி.பொன்ராஜ் கலாமுடன் இதுவரை நடத்திய விரிவான விவாதங்களுக்கு பிறகு 7 அத்தியாயங்களை முடித்துள்ளார். கடந்த 23-ந்தேதி பொன்ராஜ் கலாமுடன் கடைசியாக இந்த புத்தகம் சம்பந்தமாக விவாதித்துள்ளார்.
தமிழ்நாட்டை ஒரு வளர்ச்சிமிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என அப்துல்கலாம் கனவு கண்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் பல தொலைநோக்கு திட்டங்களை கொண்ட இந்த புத்தகத்தின் இறுதிகட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே அப்துல்கலாம் அவர்கள் மறைந்துவிட்டார்.