அப்துல் கலாம் கனவு நிறைவேறுமா : இந்திய வளர்ச்சிக்கு தேவை எது?

ஆக.15, 2015:- சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் அமரர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வல்லரசு கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் வளர்ச்சியை நேசித்த இவர், இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்று எனும் விதையை ஆழமாக விதைத்தார்.
இது வேரூன்றி வளரத் துவங்கி விட்டால், இந்தியா மிக விரைவில் வல்லரசாக உருவெடுக்கும்.
இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கான யோசனைகளை தான் எழுதிய ' இந்தியா 2020' புத்தகத்தில் கலாம் எழுதியுள்ளார். அதில்,'வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாறுவதற்கு 'வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், அடிப்படை கட்டமைப்பு, -தடையற்ற மின்சாரம்,- சீரான சாலை போக்குவரத்து, உயர்தொழில்நுட்பத்தில் தன்னிறைவு ஆகிய துறைகளில் வளர்ச்சியடைய வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
அவரது கனவு நனவாக வேண்டுமெனில், அவர் கூறிய துறைகளில் நாடு முன்னேற வேண்டும். இத்துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் நம் நாடு முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய துறை 'அடிப்படை கட்டமைப்பு' தான். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதியின் முன்னேற்றத்தை பொறுத்தே அமைகிறது. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு என்பது சாலை, ரயில், விமானம், துறைமுகம், அணைகள், மின்சாரம், பாசனம், தொலைத்தொடர்பு, குடிநீர், துப்புரவு மேலாண்மை, உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவை உள்ளடக்கியது. தற்போதைய அரசு அதற்கான பாதையில் செல்ல வேண்டும். அரசு மட்டுமே இந்த துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியாது. தனியார் பங்களிப்பும் முக்கியம்.
சாலை போக்குவரத்து: உலகில் நீளமான சாலைப்போக்குவரத்தை கொண்ட 2வது நாடு இந்தியா. 1999 காலகட்டத்தில் 'தங்க நாற்கரச் சாலை' மூலம் சாலைப் போக்குவரத்து தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் இன்னும் இந்தியாவின் மொத்த சாலைகளில் பெரும்பாலும் கிராமச் சாலைகளாகவே உள்ளன. தேசிய நெடுஞ்சாலை என்பது2 சதவீதம் மட்டுமே. அரசு தினமும் 30 கி.மீ., துாரம் என்ற அளவில் இனிவரும் ஆண்டுகளில் சாலை அமைக்க வேண்டும்.
துறைமுகம்:
இந்தியா 13 பெரிய துறைமுகங்களையும், சுமார் 200 சிறிய துறைமுகங்களையும் நாட்டின் 9 கடலோர மாநிலங்களில் கொண்டுள்ளது. இந்திய துறைமுகங்கள் 2011 கணக்கின் படி, நுாறு கோடி டன் அளவிலான சரக்குகளை கையாண்டுள்ளது. சிறிய துறைமுகங்களும் முந்தைய ஆண்டுகளை விட தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளன. குறிப்பாக குஜராத் மற்றும் ஆந்திராவில் உள்ள சிறிய துறைமுகங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. கையாளப்படும் சரக்குகளின் அளவு 2014 -- 15ல் 100கோடி டன் என்பது, 2019 - 20ல் 220 கோடி டன்னாக உயரும் என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது. ஆனால் இதற்கான உள்நாட்டு நீர்வழித்தடம், மற்ற நாடுகளைப்போல் இல்லை.
ரயில்:
இந்திய ரயில் பாதை 64,000 கி.மீ. துாரம் வரை செல்கிறது. தினந்தோறும் 12,000 பயணிகள் ரயில், 7000 சரக்கு ரயில், 7083 ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து புறப்படுகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 23 கோடி பேர் பயணம் செய்கின்றனர். அதே போல 26 லட்சம் டன் சரக்குகளை கையாள்கிறது. எதிர்காலத்தில்இது இன்னும் அதிகப்படுத்தவேண்டியுள்ளது.
மின்சாரம்:
தற்போது மின்சாரத்துறையில் இந்தியா முன்னேறியுள்ளது. இருப்பினும் 30 கோடி பேருக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. 1991ல் அனுமதிக்கப்பட்ட தனியார் துறை முதலீடு மூலம் 70 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 2015ல் 2.75 லட்சம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அதே போல புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 18 மெகாவாட்டில் இருந்து 35 ஆயிரம் மெகா வட்டாகஅதிகரித்துள்ளது. சூரிய சக்தி மின்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.அடிப்படை கட்டமைப்பை உலக தரத்தில் உயர்த்துவதற்கு இன்னும் அதிக அளவில் உழைக்கவேண்டியுள்ளது.
2 தொலைநோக்கு:
இந்தியா, சுதந்திரம் என்ற முதல் தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றது. அதே போல 'வளர்ந்த இந்தியா' என்ற 2வது தொலைநோக்கில் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என அப்துல்கலாம் ' இந்தியா 2020' புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தை, சுதந்திர நாடாக உருவாக்குவதற்காக நமது முன்னோர் (காந்தி, நேரு, நேதாஜி, பகத்சிங் உள்ளிட்ட பலர்) பாடுபட்டனர். அவர்கள், சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நாட்டு மக்கள் மனதில் பதிய வைத்தனர். அதன் மூலம் வெற்றியும் பெற்றனர். 2ம் தலைமுறையாகிய (நானும் உட்பட) நாம் 'வளர்ந்த இந்தியா'வாக மாற்ற இரண்டாவது தொலைநோக்கினை ஒன்றுகூடி முன்வைப்போம். இந்நிலை 15-20 ஆண்டுகளில் நடைமுறை சாத்தியமாகிவிடும் என்பது உறுதி' என புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.