தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது: கர்நாடகா கைவிரிப்பு

ஆக.29, 2015:- வறட்சி காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் இவ்வாண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால் அணைகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவு மழை பெய்துள்ளதால், அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனவேதான் தமிழகத்திற்கு தண்ணீர் விடும் நிலையில் கர்நாடகா இல்லை. இனி மழை பெய்தால் அதன்மூலம், அணைகளில் தண்ணீர் நிரம்புவதை வைத்துத்தான் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் விடவேண்டும் என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு, அணைகளின் நீர்மட்டம் 50 சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 55 சதவிகிதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.