100 ஸ்மார்ட் சிட்டி... கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?

ஆக.29, 2015:- மத்திய அரசின் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 98 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் இந்தியாவிலேயே அதிக அளவிலான ஸ்மார்ட் சிட்டிகள் உத்திரப்பிரதேசத்தில் தான் வரப் போகின்றது. அதாவது 13 நகரங்கள்.
அடுத்த இடம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இங்கு 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாகவுள்ளன. இந்த நகரங்களில் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்விநியோகம், துப்புறவு, பொதுப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, குடியிருப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதி, டிஜிட்டல் மயமாக்கல் என சகலமும் மேம்படுத்தப்படும்.
35 சதவீதம் மக்கள்... இந்திய நகர்ப்புற மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் இந்த 98 நகரங்களில் வசிக்கிறார்கள் என்பது முக்கியமானது. இந்தியாவின் நகர்ப்புறங்களின் முகத்தை மாற்றியமைக்கும் திட்டத்தில் இது முதல் படிக்கட்டாக அமையும்.
5 ஆண்டுகளில்... தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 நகரங்களுக்கும் மொத்தமாக ரூ. 48,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இங்கு அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். ஐந்து ஆண்டுகளில் இவை பூர்த்தி செய்யப்படும்.
தனியாரின் பங்களிப்பு... இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளும், நகராட்சி நிர்வாகங்களும் இணைந்து செயல்படும். மேலும் இந்தத் திட்டங்களில் தனியாரின் பங்களிப்பையும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
கட்டணம் நிர்ணயித்து... வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு கட்டணம் நிர்ணயித்து அதை அவர்கள் திரும்பப் பெற வழி செய்யப்படும். குறிப்பாக குடிநீர் விநியோகம், பொதுப் போக்குவரத்தில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
அடிப்படை கட்டமைப்பு மேம்படும்... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தேர்ந்தெடுக்கப்ட்ட நகரங்கள் அடிப்டைக் கட்டமைப்புகளில் மேம்படும். பிற வளர்ந்த நகரங்களுக்கு இணையான வசதிகள் இங்கும் ஏற்படுத்தப்படும். வளர்ந்த பெரிய நகரங்களுக்குச் செல்லத் தேவை இனி இந்த நகரவாசிகளுக்கு இருக்காது.
வாழ்க்கைத் தரம் உயரும்... பிற வளர்ந்த நகரங்களுக்கு இணையாக இந்த நகரங்களும் உயர்ந்து நிற்கும். மேலும் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு குறைபாடுகளால் தத்தளிக்கும் இந்த நகரங்களின் நிலை இனி மேம்படும். பல மட்டங்களில் இந்த நகரங்களில் அடிப்படை வசதிகளும், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
அடுத்த 5 ஆண்டுகளில்... கடந்த 10 வருடங்களில் மத்திய அரசு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் ரூ. 36,000 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. அடுத்து பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மத்திய அரசு ரூ. 3 லட்சம் கோடி வரை நிதயுதவியை அளிக்கவுள்ளது. இருப்பினும் அடுத்து ஐந்து ஆண்டுகளில் இவை வழங்கப்படும்.
முதல் தவணையாக ரூ. 2 கோடி... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களுக்கும் அடுத்த சில நாட்களில் முதல் தவணையாக ரூ. 2கோடி வழங்கப்படும். திட்டங்களை தயார் செய்வதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படும்.
ஆரம்பக் கட்டப் பணிகள்... அடுத்து முதல் 20 நகரங்கள் தேர்வு செய்யபப்ட்டு அவற்றுக்கு தலா ரூ. 500 கோடி வழங்கப்படும். இவற்றை வைத்து ஆரம்பக் கட்டப் பணிகளை அந்த நகரங்கள் தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.