காவிரியில் தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

செப் 17,2015:- மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று தஞ்சை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் 2 நாட்கள் நடத்தியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இது போன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீட்டை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. அத்தகைய முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் திட்டத்தால் இந்தியா வளர்ச்சி அடையும் போது தமிழ்நாடும் தலை சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்பது அனைவரின் தீராத ஆசை. இது நிறைவேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
காவிரியில் அதிகப்படியான தண்ணீரை நாம் கேட்கவில்லை. நமக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை தான் கேட்கிறோம். அங்குள்ள அரசியல் கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை உறுதிபடுத்தி கொள்ள தண்ணீர் தர மறுப்பது வருத்தம் அளிக்கிறது.
ஒரு நாட்டில் உள்ள மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
காவிரியில் தண்ணீர் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். உத்தரவாதம் தரவில்லை. ஆனால் இதை ஆணையாக பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் தான் பாகிஸ்தானில் அரசியல் நடத்த முடியும் என்று அங்குள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.