அந்நிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு

பெப் 28,2014:- மத்தியில் ஆளும் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முடிப்பதற்குள் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டுச்செல்வது என்று முடிவு செய்திருக்கிறது போலும்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நேரடி அந்நிய முதலீட்டு உச்ச வரம்பை மேலும் உயர்த்தும் முடிவு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சில்லரை வர்த்தகம், தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு பங்குச் சந்தை, மின்விநியோக கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை அதிகரித்தது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று கூறிக்கொண்டு மிகவிரைவில் ரயில்வே, கட்டுமானம் போன்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இப்படி எல்லாத்துறைகளிலும் அந்நிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மறுபுறம் மக்களை நேரடியாக பாதிக்கும் செயல் களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்திவருகிறது.
மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை விலையை உருளை ஒன்றுக்கு ரூ.220 என கடுமையாக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கடுமையான விலை உயர்வால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது பல்வேறு வழிகளில் தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு புத்தாண்டுப் பரிசாக இதனை அளித்துள்ளது போலும். கடந்த ஆண்டு சமையல் எரிவாயு மீதான மானியத்தை வெட்டி ஆண்டுக்கு 9 உருளைகளுக்கு மட்டுமே மானியம் என்று அறிவித்தது.அதற்கே கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதை குறைந்தபட்சம் 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், விலையை கடுமையாக உயர்த்தியிருப்பது ஏழை- எளிய நடுத்தர மக்களை மேலும் நசுக்கும் செயலாகும்.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பங்கள் இனி மாதந்தோறும் கூடுதலாக சுமையை சுமக்கவேண்டியிருக்கும். முன்பு சர்வதேசச் சந்தை விலையில் என்ன ஏற்ற இறக்கம்இருந்தாலும் பொதுமக்கள் நலன்கருதி அதை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டன.
அதற்கான மானியத்தை அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசே வழங்கியது. நாட்டில் உலகமய, தாராளமய, தனியார் மய பொருளாதார கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்தபிறகு சந்தையின் பிடியில் மக்களைத் தள்ளிவிடும் போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்த கொள்கைகளை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தபோது வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று குரல் எழுப்பியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை மற்றும் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவை அடிப்படையாகக் கொண்டுதான் விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான் அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிச் செய்தால் கூட இந்த அளவுக்குவிலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.