உலகில் 381 நகரங்களில் டெல்லியில்தான் காற்றில் மாசு அதிகம்

செப் 26,2015:- தெற்கு ஆசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உலக வங்கி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதனால் பெரும்பாலான பெரு நகரங்கள் ‘காற்று மாசால்’ அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை அந்த நகரங்களின் மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பெருநகரங்களில் குறிப்பாக 381 நகரங்களில் காற்று மாசு ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. டெல்லிதான் இந்த நகரங்களில் முதன்மையாக உள்ளது. உலகில் காற்று மாசு பிரச்னையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 20 நகரங்களில் 19 நகரங்கள் தெற்கு ஆசியாவில் உள்ளன.
இந்த நகரங்களில் டெல்லிதான் முதலிடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி உலக வங்கி தெரிவித்துள்ளது. வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு குறைவானவர் இறப்பு விகிதம் கிராமங்களைவிட நகர் பகுதியில் அதிகம் உள்ளது என்ற தகவலையும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் காற்றில் படிந்துள்ள மாசில் (பிஎம்) 2.5 மைக்ரான் அளவுக்கு குறைவான நுண்ணிய துகள்கள் படிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி உலக வங்கி தெரிவித்துள்ளது. கிராமங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களில் குடியேறுகின்றனர். நகரமயமாததால் பெரும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நகரங்களில் வாகனங்களின் பெருக்கமும் அதிக அளவில் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் மாசு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் தூசுகள் போன்றவற்றால் காற்றில் மாசு அதிக அளவில் படிந்துள்ளன. இது மக்களின் சுகாதாரத்தை பெரும் அளவில் பாதிக்கிறது. 2.5 மைக்ரான்ஸ் அல்லது அதற்கும் குறைவான அளவில் (பிஎம்2.5) உள்ள நுண்ணிய துகள்கள் காற்றில் படிந்துள்ளன. இதனால் மக்கள் சுவாசிக்கும்போது, எளிதில் உள்ளே சென்று நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, நுறையீரல் புற்றுநோய், மூச்சுத்திணறல் பிரச்னைகள் மற்றும் இதய நோய்கள் தாக்கும்.
தெற்காசியாவில் உள்ள நகரங்களில் டெல்லியில்தான் காற்று மாசு அதிகம் உள்ளது. காற்றில் படிந்துள்ள நுண்ணிய துகள்கள் அதிகம் உள்ளது. இது மக்களுக்கு பல்வேறு சுகாதார பிரச்னைகளை தோற்றுவிக்கும். உலக அளவில் வளரும் நாடுகளில் உள்ள 381 பெருநகரங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், 20 பெருநகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவில்தான் உள்ளன. இந்த நகரங்களில் காற்றில் மாசு அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்தப் பிரச்னை இல்லை, பாகிஸ்தானில் கராச்சி, ராவல்பிண்டி போன்ற நகரங்களிலும் வங்கதேசத்தில் டாக்காவிலும் ஆப்கானிஸ்தானில் காபூலிலும் காற்று மாசு அதிகம் உள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
1. வளரும் நாடுகளில் 381 பெரு நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அதிக அளவில் காற்று மாசு உள்ள நகரங்கள் 20ல் 19 நகரங்கள் தெற்காசியாவில் இடம்பெற்றுள்ளன.
2. சீனாவின் பெய்ஜிங் நகரில் இருப்பதைப் போன்று மூன்று மடங்கு அதிகமான அளவில் டெல்லியில் காற்று மாசுபடிந்துள்ளது. உலகின் மிக மாசுபடிந்த நகரம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
3. உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் காட்டிலும் 15 மடங்கு அதிகமாக டெல்லி நகரில் காற்று மாசு படிந்துள்ளது.
4. இந்தியாவில், மாசு படிந்த காற்று உள்ள நகரங்களில் டெல்லியைத் தவிர பாட்னா, குவாலியர், ராய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, கான்பூர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
5. உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் அதிகமாக மாசு படிந்த காற்றுள்ள நகரங்கள், பகுதிகளில்தான் இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
6. காற்று மாசு படிந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவைத் தவிர, பாகிஸ்தானின் கராச்சி, வங்கதேசத்தின் டாக்கா, ஆப்கானிஸ்தானின் காபூல் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
7. முதல் 20 நகரங்களில் தெற்காசியாவைச் சேராத ஒரே நகரம் ஈரானின் கோராமாபாத்.
8. 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான நுண்ணிய துகள்கள் காற்றில் கலந்து இருப்பதால் மக்களுக்கு எளிதில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், சுவாசக் கோளாறு முதல் புற்றுநோய் வரை ஏற்படும் அபாயம் உள்ளது.
9. வாகனங்களின் பெருக்கம், மக்கள்தொகை நெருக்கம் போன்றவையே பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரிப்புக்கு பிரதான காரணம் என்று தெரியவந்துள்ளது.
10. நகரமயமாதல், மக்கள்நெருக்கம் போன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால், எதிர்காலத்தில் சுகாதாரப் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் ஆபத்து உள்ளது.