மகளிர் போராட்டத்தால் அப்துல் கலாம் புத்தக வெளியீடு ரத்து

அக் 02,2015:- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, மகளிர் அமைப்பின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது கேரளாவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கலாம் எழுதிய பிரமுக் ஸ்வாமிஜியுடனான என் ஆன்மீக அனுபவம் என்ற நூலை பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி எஸ். கர்த்தா மலையாளத்தில் மொழி பெயர்த்திருந்தார். இந்த நூல் வெளியிட்டு விழா இன்று (சனிக்கிழமை) திருச்சூரில் நடைபெறுவதாக இருந்தது.
விழாவில் ஒரு சமூக-ஆன்மீக இந்து மத அமைப்பை சேர்ந்த சுவாமி நாராயண சன்ஸ்தா என்பவரும் அவரது சீடர்களும் கலந்துக்கொள்வதாக இருந்தது. மேலும் மலையாளத்தின் முக்கிய எழுத்தாளரான எம்.டி. வாசுதேவ் நாயரும் கலந்துகொள்வார் என கூறப்பட்டது.
சுவாமி நாராயண சன்ஸ்தா, பெண்களுடன் மேடையை பகிர்ந்துகொள்ள விரும்பாததால், கலாம் புத்தகத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்த பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி எஸ். கர்த்தாவை விழாவிற்கு வரவேண்டாம் என பதிப்பாளர்கள் கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதேவி இது பற்றி பேஸ்புக்கில் இது குறித்து எழுதினார். பெண்களின் நிழல்கூட தன் மீது விழக்கூடாது என்பதற்காக முதல் மூன்று வரிசை இருக்கைகள் சுவாமி நாராயண சன்ஸ்தா சீடர்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் அவர் பேஸ்புக்கில் கூறியிருந்தார்.
இணையத்தில் இந்த தகவல் வேகமாக பரவியதையடுத்து, மகளிர் அமைப்புகள் உட்பட பலர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர். பல பெண்கள், சுவாமியின் சீடர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் இருக்கைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மிகுந்த களேபரம் ஆனதையடுத்து கலாமின் புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இத்தகவல் அறிந்த சுவாமி நாராயண சன்ஸ்தா தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை.