தமிழ்நாடு அவமதித்ததால் மாணவி தற்கொலை... பேராசிரியைக்குத் தண்டனை தருமாறு கடிதம்

அவமதித்ததால் மாணவி தற்கொலை... பேராசிரியைக்குத் தண்டனை தருமாறு கடிதம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

அக் 02,2015:- வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட்டதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியைக்கு தண்டனை வழங்க வேண்டும் என அம்மாணவி தனது கடைசிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் கல்லாமேடுவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கலைவாணி (17), கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து திரும்பிய கலைவாணி சோகத்துடன் காணப்பட்டுள்ளார். பெற்றோர் விசாரித்தபோதும், ஒன்றும் இல்லை என்றே அவர் மழுப்பியுள்ளார்.

இரவு உணவிற்குப் பின் தூங்கச் சென்ற மாணவி, நள்ளிரவில் விஷம் குடித்துள்ளார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைவாணி, சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் கோவை செல்வபுரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கலைவாணியின் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை பானுப்பிரியா, நேற்று முன்தினம் வகுப்பறையில் வைத்து கலைவாணியை திட்டி அவமானப்படுத்தியது தெரிய வந்தது. சக மாணவர்கள் முன்பு பாடம் நடத்தத் தெரியவில்லை என கலைவாணியை அவர் கிண்டல் செய்து திட்டியுள்ளார். இதனைப் பார்த்து மற்ற மாணவ-மாணவிகள் சிரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த கலைவாணி, அன்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தனது தற்கொலைக்கு பேராசிரியை பானுபிரியா தான் காரணம் என கலைவாணி எழுதிய கடைசிக் கடிதமும் போலீசாரால் மீட்கப்பட்டது.

கடைசிக் கடிதம்:

அந்த 4 பக்கக் கடிதத்தில் கலைவாணி கூறியிருப்பதாவது: அன்புள்ள அம்மா. என்னை மன்னிச்சிடு அம்மா. நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். இனி நான் உயிரோடு இருக்க கூடாது. நான் சாகறதால எனக்கு காதல் தோல்வின்னு நினைச்சுடாதீங்க. அந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சாகுற ஆளு நான் இல்ல. என்னோட சாவுக்கு காரணம் காலேஜ் வகுப்பு மேடம்தான். எல்லாத்துக்கும் முன்னாடி வெச்சு என்னை அவமானப்படுத்திட்டாங்க. ஒரு மாணவியை இப்படி பண்ணுனா என்ன நடக்கும் என்பதை காட்டுறதுக்கு எனக்கு வேற வழி தெரியல. விளக்கமா சொல்கிறேன். பொருளாதாரம் வகுப்பு மேடம் சொல்றபடி தினமும் ஒவ்வொருத்தர் பாடம் நடத்தணும்.

சனிக்கிழமை அன்று வகுப்பில் மேடம் என்னை கூப்பிட்டாங்க. நானும் போய் பயந்து நின்னேன். நீ மறுபடியும் செமினார் எடு, உன்னை மாதிரி எல்லோரும் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. நான் எதுவும் பேசாம நின்னேன். மேடம் என்னைப்பத்தி கேலி பேசி சிரிச்சாங்க. மாணவர்களும் சிரிச்சாங்க. நான் செமினார் எடுத்ததை பார்த்தும் சிரிச்சாங்க.

நான் செமினார் முடித்ததும், வாவ்... சூப்பர், எல்லாரும் கைத்தட்டுங்கன்னு சொல்லி என்னை மேடம் அவமானப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. மாணவர்கள் சிரிச்சாங்க. அப்புறம் மேடம் என்னை கீழே வான்னு கூப்பிட்டாங்க. அழுத என்னைப் பார்த்து தொடர்ந்து கேலி செய்தாங்க. நான் செய்தது தவறுதான். அதற்காக என்னை வெளியே தனியா கூப்பிட்டு திட்டியிருந்தால்கூட தாங்கி இருப்பேன். அத்தனை பேருக்கும் முன்னாடி இப்படி பண்ணுவாங்களா அம்மா. எவ்வளவு கேவலமா இருந்தது தெரியுமா? ஸ்கூல்ல கூட தனியாக கூப்பிட்டுதான் அட்வைஸ் பண்ணுவாங்க. திட்டுவாங்க. ஆனால் இங்க சாகடிக்கிறாங்க அம்மா.

என்னோட பர்சனல் விஷயத்தை எதுக்கு கேக்குறாங்க. என்னை அவமானப்படுத்தின அந்த மேடமுக்கு தண்டனை கொடுக்கணும். இனி காலேஜுல தலைநிமிர்ந்து நடக்க முடியாது. நான் சாகறதுதான் நல்லது. எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. நான் உங்க எல்லாரையும் விட்டு போறேன். அந்த மேடமுக்கு ஏதாவது தண்டனை வாங்கி குடுங்க பிளீஸ்... இத நீங்க பண்ணலனா நான் செத்ததுக்கு அர்த்தமே இல்லை.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மாணவி கலைவாணி எழுதியுள்ளார்.

முற்றுகைப் போராட்டம்:

கலைவாணியின் தற்கொலையால் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கலைவாணியின் உறவினர் மணிகண்டன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் என்பதால், அந்த கட்சி நிர்வாகிகள் திரண்டு கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியை பானுப்பிரியாவை கைது செய்யக் கோரி அவர்கள் வலியுறுத்தினர். அப்படிச் செய்தால் தான் கலைவாணியின் உடலை வாங்குவோம் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்தனர்.

விசாரணை:

மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக கோவை செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி பேராசிரியை பானுப்பிரியா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்