கட்சி தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல

அக் 12,2015:- தாத்ரி சம்பவத்தையடுத்து கட்சி தரப்பில் தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல, அதை கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் கூறியதாவது:
பசுவதை செய்ததாக தகவல் பரவியதால் தாத்ரி கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானதாகும். இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசாமல் நிதானம் கடைபிடிக்க வேண்டும். அனைத்து கட்சிகளுமே மத நல்லிணக்கம் வலுப்பெற பொறுப்புடன் செயல் பட வேண்டும். நிலைமையை மோசமாக்கிட கூடாது. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் வரம்புக் குட்பட்டது. மதநல்லிணக்கத்தை கட்டிக்காப்பதும் சட்டம் ஒழுங்கை சீர்கெடாமல் வைத்திருப்பதும் மாநில அரசுகளின் பணியாகும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தாத்ரி சம்பவத்தில் அப்பாவி களை வழக்கில் சிக்க வைத்தால் தக்க பதிலடி தருவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாத்ரி கிராமத்தில் இக்லக் என்பவர் பசுவதை வதந்தி விவகாரத்தில் கொல்லப்பட்டதை யடுத்து அந்த கிராம மக்கள் துரத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பாஜக எம்பி யோகி ஆதித்யநாத் என்பவர் ஓர் அமைப்பை உருவாக்கி, தாத்ரி கிராமத்து மக்களுக்கு எல்லா உதவியும் துப்பாக்கியும் தருவதாக அறிவித்தார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்த்து நிதானத்தை கடைப்பிடிக்குமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.