இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்திருக்கிறார் சிலிக்கன் வேலியில் பணிபுரிந்த ஜோசப்

அக் 12,2015:- தனது பொறியியல் அறிவைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்திருக்கிறார் ஜோசப் என்னும் விவசாயி.
64 வயதான ஜோசப் அடிப்படையில் ஒரு கணிப்பொறி பொறியாளர். அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரான சிலிக்கன் வேலியில் பணிபுரிந்த அவர், ஒரு விவசாயி என்றே அறியப்பட விரும்புகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தூகல் என்னும் இடத்தில் 75 ஏக்கர் அளவில் நிலத்தை வைத்திருக்கும் ஜோசப், அங்கே 13 வகையான இயற்கையான பயிர்களை பயிரிட்டு வருகிறார். இவை அனைத்தும், அண்டையில் உள்ள மற்ற தோட்டத்து விவசாயிகளால் பெரிய அளவில் வளர்க்கப்படாத வகைகள். அவையனைத்தும் மற்ற விவசாயிகளால் வணிக ரீதியாக பெரியளவில் விளைச்சலைத் தராத வகைகளாகவே பார்க்கப்படுகிறது.
ஜோசப் தனது விளைநிலத்தில் பாசனத்திற்கு புதிய முறைகளை பயன்படுத்துகிறார். பொழியும் மழை நீர் முழுமையாக சேகரிக்கப்பட்டு, 60 அடி ஆழ தண்ணீர்த் தொட்டி மற்றும் ஒன்பது சிறிய தொட்டிகளிலும் சேமிக்கப்படுகிறது.
அவர் தன்னுடைய கணிப்பொறி அறிவைக் கொண்டு, பம்ப் மூலம் நீரை எடுத்து முறையான கால இடைவெளிகளில் தண்ணீர் பாய்ச்சுகிறார். அவரின் வெற்றிகரமான விவசாயத்தில் பலாப்பழம், முந்திரி, கோகோ, அவரை, மிளகு, நெல்லிக்காய், தேங்காய் மற்றும் எலுமிச்சை ஆகியவை அடக்கம்.
இது குறித்து ஜோசப் கூறும்போது, "விளைநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், கணிசமான மழைப்பொழிவு இருக்கிறது. பெய்யும் மேற்பரப்பு நீர், சிறிய தொட்டிகளுக்கும் அங்கிருந்து மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் மூலம், பெரிய தொட்டிக்கும் சென்றுவிடும்.
இயற்கைப் பயிர்களை விளைவிப்பதில் அக்கறையோடு, அறிவியலையும் சேர்ப்பதால், விளைச்சலுக்கு ஏற்ற நல்ல சந்தை விலையைப் பெற முடிகிறது. தொன்மை வாய்ந்த பயிர்கள் பருவத்தைத் தாண்டியும் விளைவதால், ஆண்டு முழுக்க வருமானம் பார்க்கிறேன்" என்று பெருமிதமாக கூறினார்.