அப்துல் கலாம் கடைசியாக பேசிய வார்த்தைகள்! மேகாலயா கவர்னர் நெகிழ்ச்சி

அக் 13,2015:- மேகாலயா சென்றபோது, அப்துல் கலாம் இறப்பதற்கு முன், கடைசி கட்டத்தில் நடந்த சம்பவத்தை, தமிழகத்தை சேர்ந்த, மேகாலயா கவர்னர், கோவையில் நேற்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேகாலயா மற்றும் மணிப்பூர் கவர்னராக, தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் பணியாற்றி வருகிறார். அவருக்கு, 'தேசபக்தா' அமைப்பு சார்பில் பாராட்டு விழா மற்றும் 'பசுமை பாரதம்' திட்ட துவக்க விழா, கோவையில் நேற்று நடந்தது. விழாவில், மரக்கன்றுகளை வழங்கி, கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது: இறைவன் சுகமாக இருந்த நேரத்தில், படைத்த பூமி தான் வடகிழக்கு பகுதியாக இருக்கும் மேகாலயா; இயற்கை வளம் செழித்து, வளர்ந்து, பூத்து குலுங்குகிறது. அங்கு பாயும் பிரம்மபுத்திரா நதியானது, சிவபெருமான் தலைமுடி பிரிந்து கிடப்பது போல, பல கிளைகளாக பிரிந்து செல்வதை பார்க்கும் போது, மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எல்லா நதிகளையும் மிஞ்சும்படியான அற்புதமான நதி பிரம்மபுத்திரா.
அந்த எழில் கொஞ்சும் தேசத்தில் தான், அப்துல் கலாம் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார். மேகாலயாவில் சொற்பொழிவாற்ற வருவதாக எனக்கு போன் செய்தார். நானும் மிக்க மகிழ்ச்சியோடு, 'வாருங்கள்' என, அழைத்தேன். அங்கு வந்தவுடன், ஓய்வு விடுதிக்கு அழைத்துச்சென்றேன். 'டீ, காபி... என்ன சாப்பிடுகிறீர்கள்' எனக்கேட்டேன். 'டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லை' என்றார். இருவரும் சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் தான் பேசிக்கொண்டோம். தேசத்தை பற்றி அவ்வளவு நேசத்துடன் பேசினார். எனக்கு ஒரு ஆங்கில புத்தகம் ஒன்றை கொடுத்தார். பிறகு, 'காலை டிபன் என்ன சாப்பிடுகிறீர்கள்' எனக்கேட்ட போது, 'இட்லி, தோசை எதாவாது சாப்பிடுகிறேன்' எனறார். சாப்பிட்டவுடன், மாணவர்களுடன், 'கலந்துரையாடி விட்டு வருகிறேன்' எனக்கூறி சென்றார்.
கலாம் சென்று, 20 நிமிடங்களில் எனக்கு போன் வந்தது. 'பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில், கலாம் மயங்கி விழுந்து விட்டார்' என, தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்றேன். மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்தேன். அவரது உடலை டில்லி கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தோம்.அவரது உடலுடன் நானும் புறப்பட்டேன். 'புரோட்டகால்படி, கவர்னராகிய நீங்கள் செல்லக்கூடாது' என, அதிகாரிகள் கூறினர். அப்போது நான், 'எனது நாட்டை சேர்ந்தவர், தமிழர், இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர், புரோட்டகால் பற்றி கவலையில்லை. அவரது உடலுடன் செல்வேன்' எனக்கூறினேன். இதுபற்றி பிரதமருடன் பேசிய போது, 'நீங்கள் அவரது உடலுடன் வருவது நல்லது. நீங்கள் வந்தால், எனக்கு அது பற்றி கவலை இருக்காது. நீங்களும் வாருங்கள்' என, மோடி உத்தரவிட்டார். கலாம் உடலுடன் , ராமேஸ்வரம் வரை வந்து ஒப்படைத்து விட்டு சென்றேன்.
கலாம் இறுதியாக பேசும் போது, 'உலகத்தில் ஒற்றுமை அவசியம்' என்பதை வலியுறுத்தியுள்ளார். அப்போது ஒரு மாணவர், 'உலகப்போர் வருமா' என, கேள்வி எழுப்பியுள்ளார். 'அதற்கு வாய்ப்பே இல்லை' என பதில் அளித்த அவர், 'வியாபார போட்டி இருக்கும். ஆனால் பிரச்னை வராது' என்றவர், ஆனால், 'பயங்கரவாதம் தான் அச்சுறுத்தலாக...' என்ற வார்த்தையை முடிப்பதற்குள் மயங்கி விழுந்துள்ளார். அற்புதமான ஒரு மனிதர், நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
நம் நாட்டை ஒவ்வொரும் நேசிக்க வேண்டும். மலை, நதி, இயற்கை அனைத்தும் புனிதமானது. ஒற்றுமையை அனைவரும் பேணிக்காக்க வேண்டும். சமுதாயத்தில் கொடுத்து வாழ பழக வேண்டும். கோவை மக்கள், நிறைய தியாகம் செய்துள்ளனர். நன்மக்களை கொண்ட பூமியாக கோவை திகழ்கிறது. ஜி.டி.நாயுடு போன்ற பெரியவர்களை சந்தித்துள்ளேன். மேகாலயா மாநிலத்துக்கு என்னை கவர்னராக நியமித்தவுடன், அங்குள்ளவர்கள் பதற்றம் அடைந்தனர். காரணம், அந்த மாநிலத்தில், ௮௦ சதவிகித மக்கள் கிறிஸ்தவர்கள். நான் இந்து இயக்கத்தில் பணியாற்றியதை பற்றி, பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளனர். இதை அறிந்து, அனைத்து மதத்தை சேர்ந்தவர்களை அழைத்து, விருந்து கொடுத்தேன். 'யாரும் பதற்றம் அடைய வேண்டாம்; நான் எல்லோருக்கும் பொதுவானவன்; எல்லோரையும் ஆண்டவனின் வடிவமாக பார்க்கிறேன்' என, பேசினேன். அனைத்து மக்களும் உண்மையை புரிந்து கொண்டு, என்னை பற்றிய தவறான எண்ணத்தை மறந்து விட்டனர். இவ்வாறு சண்முகநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தா சுவாமிகள், 'தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, 'தேசபக்தா' துணை தலைவர் கனகசபாபதி, ராஜகோபால் மற்றும் பலர் பேசினர்.