ராணுவத்திடம் இருந்த 615 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பு!

அக் 15,2015:- கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.
கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு செயல் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்துகொண்டார்.
அப்போது இலங்கை ராணுவத்தினரின் கைவசம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த 476 ஏக்கர் நிலத்தையும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 139 ஏக்கர் நிலமுமாக சேர்த்து மொத்தமாக 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் அதிபர் சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.
இதனையடுத்து பொதுமக்களிடையே பேசிய அவர், "போர் காலத்தில் இலங்கை ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள் இன்றைய தினம் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்றார்.
இந்த விழாவில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.