கட்டுரைகள் நாடகத்துக்காகவே ஒரு தியேட்டர் 365 நாளும் நாடகம்!

நாடகத்துக்காகவே ஒரு தியேட்டர் 365 நாளும் நாடகம்!

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

"நாடகத்தைப் பாத்துட்டு எஸ்.வி.சேகர் அங்கிள், ‘உன்னைப் பாத்தா கொஞ்சம் பயமாத்தாம்மா இருக்கு’ன்னு  சொன்னார். கிரேசி மோகன் அங்கிள், ‘அடுத்த தலைமுறைக்கு நாடகத்தைக் கொண்டுபோக ஓர் ஆள் ரெடி’ன்னு தட்டிக்  கொடுத்தார். ‘நான் 60 வருஷமா நாடகத்தை கொண்டு வந்துட்டேன். எம்பொண்ணு அடுத்த 60 வருஷத்துக்கு அதைக் கொண்டு  போய் சேத்திடுவா’ன்னு அப்பா சொன்னபோது எனக்கு கண் கலங்கிடுச்சு. பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பாராட்டியும்  உற்சாகப்படுத்தியும் பேசுறப்போ பொறுப்பும் அக்கறையும் கூடின மாதிரி இருக்கு...’’ - சிலிர்ப்போடு பேசுகிறார் மதுவந்தி!

ஜனரஞ்சக நாடகக்கலையை ஒரு தவம் போல முன்னெடுத்து வரும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள்தான் மதுவந்தி. பாடப்புத்தகங்கள் அற்ற வேறுபட்ட கல்விமுறையைக் கொண்ட பள்ளியொன்றை நடத்தி வரும் மதுவந்தி, இப்போது நாடக மேடைக்கு வந்திருக்கிறார். உள்ளடக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் புதுமைப்படுத்தி இன்னும் ரசனையாக நாடகக்கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முனையும் மதுவந்தி, ‘சக்தி’, ‘சிவசம்போ’,‘பெருமாளே’ ஆகிய நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். நகர்புற மேல்தட்டு மேடைகளில் மட்டுமே ஒலித்த நாடகத்தை கிராமப்புறங்களுக்கும் கொண்டு சென்று ரசிகர்களை
ஈர்த்திருக்கிறார்.

மதுவந்தியிடம் பேசினால், அவரின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. “தாத்தா காலத்தில இருந்து, நாடகக்கலையில ஊறின குடும்பம். ஆனா, தாத்தாவோ, அப்பாவோ ‘நீ நாடகத்துக்கு வரணும்’னு கூப்பிட்டது கிடையாது. எனக்கு சிறுவயது இலக்கே நாடகம்தான். திருமணத்துக்கு முன்னால நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். திருமணத்துக்குப் பிறகு ஸ்கூல் பக்கம் கவனம் திரும்பிடுச்சு. நாடகத்து மேல ஆசையிருந்தும் நேரமின்மையால அதுல இயங்க முடியலே. இடையில திடீர்னு ஓர் உந்துதல்... அப்பா கூட வேலை செஞ்ச ராஜேஷ்வர்கிட்டப் பேசினேன்.

அப்பாக்கிட்ட இருந்த கலைஞர்கள் மட்டுமில்லாம, இளம் தலைமுறை கலைஞர்களையும் ஒருங்கிணைச்சு ஒரு குழுவை ஆரம்பிச்சேன். முதன்முதல்ல ‘சக்தி’யை மேடையேற்றினோம். அப்பாவோட யுனெட்டட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடக்குழுவோட 60வது ஆண்டு நிறைவு விழாவில நாடகம் நடத்தினது நெகிழ்வான அனுபவமா இருந்துச்சு. தொடர்ச்சியா கிடைச்ச வரவேற்பும் உற்சாகமும் இன்னும் பொறுப்போட இயங்க வேண்டிய நிர்பந்தத்தோட பரபரப்பா பயணம் பண்ணிக்கிட்டிருக்கோம்...’’ - படபடவென பேசுகிறார் மதுவந்தி.

கதையில் மட்டுமின்றி, மேடை அமைப்பு, விஷுவல் எபெக்ட்ஸ், இசை என பல விதங்களில் நவீனங்களை கையாண்டு சுவாரஸ்யப்படுத்துகிறார் மதுவந்தி. ‘சக்தி’ நாடகத்தில் சுழல் மேடை, ‘பெருமாளே’ நாடகத்தில் முழுமையாக சென்னை மொழி, வித்தியாசமான செட் அமைப்பு என வித்தியாசப்படுத்தி அசத்துகிறார். மும்பை, டெல்லி போன்ற பிரதான இந்திய நகரங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, அரபு நாடுகளிலும் நாடகங்கள் நடத்தியுள்ளார். அதே நேரத்தில் சென்னைக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த நாடக மேடையை சீர்காழி, கும்பகோணம் என கிராமிய நகரங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறார்.

“தாத்தா, அப்பாவுக்கு பிறகு மூன்றாம் தலைமுறை நான். தாத்தா, அப்பா சாதிச்சதைத் தாண்டி நான் பெரிசா சாதிக்கிறதுக்கு  ஒண்ணுமில்லை. ஆனா, இந்த தலைமுறைக்கு தகுந்த சிந்தனை இருக்கே... சினிமா அளவுக்கு நாடகத்தை மக்கள்  ரசிக்கிறதில்லைன்னு பொதுவா ஒரு பார்வை இருக்கு... அது உண்மையில்லை. நாம கிராமத்து வீடுகள் வரை நாடகத்தைக்  கொண்டு போய் சேக்கலே. காலத்துக்குத் தகுந்த மாதிரி சில புதுமைகள் தேவையிருக்கு. அதையெல்லாம் கூடுதலா சேர்த்து சென்னையைக் கடந்து போக ஆரம்பிச்சோம்.

அங்கெல்லாம் மக்கள் மனம் விட்டு சிரிக்கிறதைப் பார்க்கும்போது பெருமிதமா இருக்கு. நாடகத்துல இன்னைக்குப் பெரிய பெரிய  முயற்சிகள் எல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. வெளிநாட்டு தியேட்டரோட தாக்கம் இங்கேயும் இருக்கு. இன்னொரு பக்கம் வரலாற்று நாடகங்கள் மேடைகளை ஆக்கிரமிக்குது. அதையெல்லாம் உள்வாங்கியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை என் நாடகம், ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட். மக்களுக்கு இன்னைக்கு பணிச்சூழல், குடும்பச்சூழல் எல்லாமே அழுத்தமா மாறிடுச்சு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பேசி, சிரிச்சு சந்தோஷமா இருக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை நெருக்கடியா மாறிடுச்சு.

இந்த மக்களை மற்ற பிரச்னைகளை எல்லாம் மறந்துட்டு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது மனம் விட்டு சிரிக்க வைக்கணும். அதுதான் என்னோட நோக்கம். அதுக்காக நாடகத்துல வெறும் காமெடி மட்டும்தான் இருக்கும்னு இல்லை. சமூகத்துக்குத் தேவையான செய்தியும் இருக்கும். எங்க தாத்தாவும் அப்பாவும் கடைபிடிச்ச ஃபார்முலா இதுதான். இதைத்தான் நான் மேலும் ஒரு படி முன்னே எடுத்துட்டுப் போறேன். சீர்காழி, சிதம்பரம், கும்பகோணத்துல எல்லாம் மக்கள் அவ்வளவு ரசிக்கிறாங்க.

30 வருஷத்துக்குப் பிறகு அவங்க நாடகத்தைப் பாக்குறாங்க. அரங்கத்துல இருக்கை இல்லாம நின்னுக்கிட்டுப் பாக்குற அளவுக்கு கூட்டம். அவ்வளவு ரசனை. இன்னும் நிறைய அந்தப் பகுதிகளுக்குக் கொண்டு போகணும்...’’ - நெகிழ்வாகச் சொல்கிறார் மதுவந்தி.மதுவந்தி பத்மா சுப்பிரமணியத்தின் மாணவி. நாட்டியத்தில் தேர்ந்த ஞானம் பெற்றவர். “தியேட்டர்ல எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்கு தாத்தா, அப்பா ஒரு காரணம்னா என் குரு பத்மா சுப்ரமணியம் இன்னொரு காரணம். அவங்க கத்துக் கொடுத்தது, வெறும் நடனம் மட்டுமில்லை. ‘டான்ஸ் தியேட்டர்... இது
 புதுமையான வார்த்தையா இருக்கலாம். ஆனா, பரத நாட்டிய நங்கையை ஒரு கதாபாத்திரமா சுழல வைக்கிற வித்தை  அவங்களுக்கு மட்டுமே வாய்ச்சது. வெவ்வேறு கதாபாத்திரங்கள்ல, நான் வாழ்ந்து பாத்திராத கதைகள்ல இயல்பாவும்  எளிமையாவும் என்னால ஐக்கியமாக முடியுதுன்னா, அதுக்கு என் குரு முக்கியமான காரணம்...’’ என்கிற மதுவந்தி, தியேட்டர்  கலையை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அக்கறையாகப் பேசுகிறார்.

“தியேட்டர் நசிஞ்சிடுச்சு... அதுக்கு எதிர்காலம் இல்லைன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடில்லை. நாடகத்துக்கு  எக்காலத்திலேயும் அழிவே இல்லை. அது ஆதி கலை. வெவ்வேறு வடிவங்களை எடுக்குமே ஒழிய மறையாது. இளைஞர்கள்  மத்தியில் நாடகத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கு. சபாக்கள்ல நிறைய இளைஞர்களைப் பார்க்க முடியுது. சிறுநகரங்கள்லயும்  மக்கள் எதிர்பார்க்கிறாங்க. வெளிநாடுகள்ல தமிழ் கலைஞர்களோட அடையாளமா நாடகத்தைத் தான் பாக்குறாங்க. அமெரிக்காவுல மட்டும் 12 நகரங்கள்ல ‘சிவசம்போ’ நாடகத்தை மேடையேத்தினோம்.

எல்லாமே மக்களால நிறைஞ்ச அரங்குகள். திரும்ப திரும்ப பாக்க வந்த ரசிகர்களையும் நான் கவனிச்சேன். திரைப்படம் இன்னைக்கு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துற கலையா வளர்ந்திருக்கலாம். அதுக்கு அடித்தளம் நாடகம் தானே? முன்னணியில இருக்கிற நிறைய கலைஞர்கள் நாடகத்துல இருந்து போனவங்கதானே? இன்னமும் கிராமங்கள்ல வள்ளி திருமணமும், அரிச்சந்திர மயான காண்டமும் ஒளிச்சுக்கிட்டுத்தானே இருக்கு? நாடகக்கலையை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கு. கிரேசி மோகன், பாலாஜி, பாம்பே ஞானம், காந்தன் சார்னு நாடகக்கலையில ஆழங்கால் பட்ட பலரும் எங்களை உற்சாகப் படுத்துறாங்க. வழி நடத்துறாங்க.

அமெரிக்காவுல நாடகங்களுக்குன்னே அரங்கங்கள் இருக்கு. 365 நாளும் ஹவுஸ்ஃபுல்லா நாடகங்கள் போயிக்கிட்டிருக்கு. அந்த  சூழல் இங்கேயும் வரணும். நிறைய கார்பரேட் நிறுவனங்கள் தியேட்டர் மேல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கிறது நல்ல  சகுனம். அதுமாதிரி உதவிகளைத் திரட்டி நாடகத்துக்குன்னே ஒரு தியேட்டர் கட்டணும். அதுல 365 நாளும் நாடகம் போடணும்...’’ என்று கனவுகளை விரிக்கிறார் மதுவந்தி.

- வெ.நீலகண்டன்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்