உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு

உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் கடன் பிரச்சினைகளால் தாக்கப்படுவது, தற்கொலை செய்வது தேசத்துக்கு தலைகுனிவு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் டிராக்டர் வாங்கியதற்கான தவணையைத் திருப்பிக் கட்டாததால் விவசாயி ஒருவர் தாக்கப்பட்டதோடு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியலூர் அருகே இதேபோன்று கடனைச் செலுத்தாததால் டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டு விவசாயி ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் தனியார் நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது.
பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதில்லை. லாபநோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றமே என்பது இவ்விரண்டு சம்பவங்களிலும் புலப்படுகிறது. கந்துவட்டிக்காரர்களைப்போல தனியார்நிதி நிறுவனங்கள் செயல்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இல்லாத நிலையிலும், விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கோ, வேறு வேலைக்கோ, விவசாயிகள் சென்றுகொண்டிருக்கும் நிலையிலும், விளைநிலங்களை விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடிச் செல்லும் நிலையிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்னைகளை அரசு நிர்வாகம் பரிவோடு கவனிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும் கடன் தொகையினை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துத் வந்தாலும், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்காக விவசாயிகள் ஏன் செல்ல நேரிடுகிறது என்பதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் நிதி நிறுவனங்களிடம் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன்களை பொதுத்துறை வங்கிகளுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வராக்கடன்களின் தொகை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பெற்று வங்கிகளை ஏமாற்றியவர்கள் தங்கள் வசதிகளிலிருந்து இம்மியளவும் குறையவில்லை என்ற நிலையில் உலகிற்கே உணவளிக்கும் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான் என்பது விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்டிருக்கும் நம் தேசத்திற்கு தலைகுனிவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.