பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் குறைப்பு: மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
சாமானிய மனிதர்களின் முக்கிய சேமிப்புகளான பிபிஎஃப், கேவிபி, அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் முடிவாகக் கருதப்படுகிறது.
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மறுநிர்ணயம் செய்வது என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி மத்திய அரசு முடிவெடுத்தது. இப்போது முதல்முறையாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டுக்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதேபோல கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 8.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவே தொடரும். அதே நேரத்தில், 5 ஆண்டு தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக முதலீடு செய்யப்பட்டு மாதம்தோறும் வட்டி பெறும் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொன்மகள் திட்டமும் தப்பவில்லை: பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக மோடி அரசு அண்மையில் அறிவித்து பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்மகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 9.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மூத்த குடிமக்களின் 5 ஆண்டு சேமிப்புத் திட்டங்களுக்கு தற்போது 9.3 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த வட்டி 8.6 சதவீதமாக இருக்கும்.
அஞ்சலகங்களில் 1, 2, 3, ஆண்டு தொடர் வைப்பு நிதிக்கு (ஆர்டி) இப்போது 8.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் ஓராண்டு தொடர் வைப்பு நிதிக்கு 7.1 சதவீதமும், 2 ஆண்டு தொடர் வைப்புக்கு 7.2 சதவீதமும், 3 ஆண்டு தொடர் வைப்புக்கு 7.4 சதவீதமும் மட்டுமே வட்டியாக வழங்கப்படும்.
5 ஆண்டு நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டு தொடர் வைப்புக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 16-இல் மத்திய அரசு அறிவித்தது. அப்போது அஞ்சலக குறுகிய கால சேமிப்புக்கான வட்டி விகிதம் மட்டும் 0.25 சதவீதம் உடனடியாகக் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது பொன்மகள் சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் உள்பட அனைத்து சிறு சேமிப்புகளுக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.