ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் உத்தரகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தரகண்டில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 9 பேர் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், கடந்த மாதம், 27ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து, ஹரிஷ் ராவத் தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அறிவிப்புக்கு, உத்தரகண்ட் ஐகோர்ட் தடை விதித்தது. வரும், 29ல், சட்டசபையில் பெரும் பான்மையை ஹரிஷ் ராவத் நிரூபிக்க வேண்டும் என, ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
மேல்முறையீடு:
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டதால், அவருடைய அமர்வில்,நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த மனு மீது, நேற்று விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும், ஐகோர்ட் தீர்ப்பில், நீதிபதிகள் கையெழுத்திட்ட நகல் இதுவரை தரப்படவில்லை. வரும், 26ம் தேதிக்குள், நீதிபதிகள் கையெழுத்திட்ட தீர்ப்பை அளிக்க வேண்டும்.
அதனால், வரும், 27ம் தேதி வரை, ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அதுவரை குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதி ஆட்சியே அங்கு தொடர வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் கூறியுள்ளனர்.9 எம்.எல்.ஏ.,க்கள் மனுஅதற்கு முன்னதாக, ஏப்., 27ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை, உத்தரகண்டில் ஜனாதிபதி ஆட்சியை நீக்க மாட்டோம் என்ற உறுதியை, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி அளித்தார்.
இதற்கிடையே, 29ல் நடக்கவிருந்த, பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப் பில் கலந்து கொள்ள, ஐகோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி, 9 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒருநாள் முதல்வர்:
சுப்ரீம் கோர்ட் உத்தர வைத் தொடர்ந்து, உத்தரகண்டில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியே அமல்படுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம், ஹரிஷ் ராவத், ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்தார். நேற்று முன் தினம் ஐகோர்ட் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, உடனடியாக முதல்வராக அவர் செயல்பட்டார். அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டி, 11 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.