அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி போட்டோக்களுக்கே அனுமதி : உச்சநீதிமன்றம்

மே.13, 2015:- அரசின் பொது விளம்பரங்களை நெறிமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைமை நீதிபதியின் புகைப்படம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
முதல்வர் போட்டோக்கள் கூட விளம்பரங்களில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கோர்ட் இவ்வாறு கூறி உள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு பணத்தில் வௌயிடப்படும் விளம்பரங்களில், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
அமைச்சர்கள், தனி நபர் படங்கள் இடம் பெறுவது ஜனநாயத்திற்கு முரணானது ஆகும். தேர்தல் நேரங்களில் அனைத்து ஊடகங்களுக்கும் அரசு தரப்பில் விளம்பரம் தர வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கோஹாய், ரமணா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு விளம்பரம் கட்டுப்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுஅளித்த அனைத்து பரிந்துரைகளையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. எனினும், ஊடகங்களுக்கு, அரசாங்கம் வழங்கும் விளம்பரம் தொடர்பாக சிறப்பு தணிக்கை ஏற்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கவில்லை.
அரசு விளம்பரம் கட்டுப்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று நபர்கள் அடங்கிய குழு வழங்கிய மற்றொரு பரிந்துரைக்கும் அனுமதி வழங்கவில்லை. அரசு விளம்பரங்களில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் இடம்பெற கூடாது என்ற பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கவில்லை.
அரசியல் ஆதாயத்திற்காக, பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அரசு மற்றும் அதிகாரிகளால் வழங்கப்படும் அரசு விளம்பரங்களில் பொதுமக்களின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடைசெய்ய, நெறிமுறைகளை உருவாக்க கடந்த ஏப்ரல் 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு 3 நபர்கள் அடங்கிய குழுவை அமைத்தது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி இவ்வழக்கு மீதான விசாரணையின்போது அரசு விளம்பரங்களுக்கு கட்டுபாடுகள் விதிப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது