பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு மும்பைவாசிகள் தாராள நிதி உதவி!

மே.20, 2015:- மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு, மும்பைவாசிகள் தாராள நிதியுதவி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சபா தாரிக் அகமது, 15.
அரிதான மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவான நிலையில், சபாவின் உயிரை காப்பாற்ற மேலும் நிதி உதவிக் கோரி, சமூக வலைதளம் மூலம் அவரின் சகோதரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை அறிந்த, இளகிய மனம் படைத்த மும்பைவாசிகள், சபாவின் சிகிச்சைக்கு இதுவரையில், 1.50 லட்சம் ரூபாயை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து, சபாவின் தாய் நசியா கூறியதாவது:
என் மகளை தாக்கியுள்ள மரபணு கோளாறு நோய், கொஞ்சம் கொஞ்சமாக, கல்லீரல் மற்றும் மூளையை செயலிழக்க செய்து வருகிறது.இந்த நோயை குணப்படுத்த லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ள நிலையில், மும்பைவாசிகளின் இந்த நிதி உதவி மதிப்பிட முடியாதது.
நாங்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என, தெரிய வேண்டாம் என, சிலர் கேட்டு கொண்டனர். ஆனால், பொய் சொல்ல விரும்பவில்லை.அன்பையும், பாசத்தையும் பொழியும் இங்குள்ள மக்கள் மீதும், மருத்துவர்கள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது; எனது மகள் விரைவில் குணமடைவாள். இவ்வாறு, அவர் உருக்கமாக கூறினார்.